அமைதி முயற்சிக்கு மத்தியிலும் போரை ஆரம்பிப்பது பற்றி பரஸ்பரம் எச்சரிக்கை

4 Min Read

ஈரானுடனான ஒப்பந்தம் ஒன்றுக்கான திட்டம் தொடர்பில் தமக்கு தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டபோதும், அதில் உள்ளடங்கும் விடயங்கள் என்ன என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் ஈரான் மோசமாக நடந்து கொண்டால் மீண்டும் அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஈரானின் முன்மொழிவு ஒன்றை டிரம்ப் நிராகரித்ததாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார். ஈரான் முன்வைத்த திட்டத்தில் ஈரானிய அணுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை பிற்போடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஈரானின் இந்த முன்மொழிவு தொடர்பில் சனிக்கிழமை (02) டிரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அவர்கள் உடன்படிக்கையின் கருத்துப் பற்றி என்னிடம் குறிப்பிட்டார்கள். அதில் உள்ளடங்கும் சொற்பிரயோகங்களை அவர்கள் என்னிடம் தரவிருக்கிறார்கள்’ என்றார்.

இந்நிலையில் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் கூறியிருப்பதாவது,இந்த முன்மொழிவு ஏற்கமுடியுமானது என்று தான் நம்பவில்லை என்றும் ஈரான் தான் செய்த செயலுக்குப் போதுமான விலையைக் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஆரம்பிக்கப்படுமா என்று கேட்டதற்கு, டிரம்ப் பதில் அளிக்கும்போது, ‘அது பற்றி நான் கூற விரும்பவில்லை. அதாவது, செய்தியாலருக்கு அது பற்றி என்னால் கூற முடியாது. அவர்கள் தவறாக நடந்துகொண்டால், அவர்கள் மோசமாக ஏதாவது செய்தால், இப்போதைக்கு நாம் பார்ப்போம். ஆனால் அது நடக்கச் சாத்தியம் உள்ளது’ என்றார்.

இதேவேளை அமெரிக்காவுடன் முழு அளவில் மீண்டும் போர் வெடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஈரான் புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் எந்த வகையான உடன்படிக்கைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தாத சூழவில் மோதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாகவும் அந்தப் படை தெரிவித்துள்ளது.

ஈரானால் அணு அயுதம் வைத்திருக்க முடியாது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருவதோடு, ஈரானின் புதிய முன்மொழிவு குறித்து தான் திருப்தி அடையவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். இதேநேரம் அமெரிக்கா தனது அணுமுறையை மாற்றிக்கொண்டால் இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈரான் தயாராகவே உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வலியுறுத்தியுள்ளார்.

அணு பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னர் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. மத்தியஸ்தர்கள் ஊடான அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்டிருக்கும் ஈரானின் அமைதித் திட்டத்தின் காலவரிசையில் இது பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈரான் முன்வைத்திருக்கும் 14 அம்ச போர் நிறுத்த திட்டம் குறித்த விபரத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் அமெரிக்க படைகள் ஈரானை சுற்றிய பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவது, ஈரான் மீதான முற்றுகையை நீக்குவது, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிப்பது, இழப்பீடு வழங்குவது, தடைகளை அகற்றுவது மற்றும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிவும் போரை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் புதிய பொறிமுறை ஒன்றை அமைப்பது ஆகிய விடயங்கள் உள்ளடங்குகின்றன.

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நான்கு வாரங்களுக்கு முன்னர் இடைநிறுத்தியபோதும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கை ஒன்று இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் போர் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தப் போர் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் லெபனானில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டாலும் இஸ்ரேல் தனது படை நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறது. தெற்கு லெபனானில் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து பொது மக்களை வெளியேறும் புதிய உத்தரவுகளை இஸ்ரேல் நேற்று வெளியிட்டிருந்தது. லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளுக்கு அப்பால் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களையே வெளியேறுவதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘உங்கள் பாதுகாப்புக்காக உடனடியாக உங்கள் வீடுகளை காலி செய்து, கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் (0.6 மைல்) தூரத்திற்கு அப்பால் திறந்த பகுதிகளுக்கு நகர வேண்டும்,’ என்று இஸ்ரேல் இராணுவம் அரபு மொழியில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10 இற்கும் அதிகமான கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக லெபனான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் கடந்த சனிக்கிழமை நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதியே இந்த போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தத்தை மீறி காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுகொல்லப்பட்டதோடு முன்னதாக இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டாதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *