பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 சர்வதேச போட்டியை ஆறு விக்கெட்டுகளால் வென்ற நியூசிலாந்து அணி தொடரை 1–1 என சமநிலை செய்தது.
மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டி மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி 14.2 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜோர்ஜ் கிளார்க்சன் 2 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து அணியும் ஆரம்பத்தில் மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி முதல் 4 விக்கெட்டுகளையும் 33 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் மத்திய வரிசையில் வந்த பெவொன் ஜகப்ஸ் 31 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணி தொடர் தோல்வியை தவிர்க்கும் வகையிலேயே இந்தப் போட்டியில் ஆடியது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முன்னதாக நடந்த ஒருநாள் தொடரை 1–2 என இழந்தமை குறிப்பிடத்தக்கது.



