எட்டாக்கனியாகும் உடன்பாடும் நீடிக்கும் நெருக்கடியும்

7 Min Read

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரு வாரகால போர் நிறுத்தம் முடிவுறுவதற்கு இன்னும் இரண்டொரு தினங்களே உள்ளன. அதாவது நாளை 22 ஆம் திகதியோடு இப்போர் நிறுத்த காலம் முடிவுறும். அதன் பின்னர் போர் நிறுத்தம் நீடிக்குமா? இல்லையா? என்பதை அடுத்துவரும் மணித்தியாலயங்கள் தான் தீர்மானிக்கும்.

அதேநேரம் இந்த யுத்த நிறுத்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 11ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடந்த முதலாம் சுற்றுப் பேச்சும் தோல்வியடைந்தது. அதன் விளைவாக ஈரானிய துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 13ஆம் திகதி முதல் ஹொர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டது.

பேச்சுக்கு இடையூறாகியுள்ள விடயங்கள்

என்றாலும் ஈரானின் அழுத்தத்தின் பின்புலத்தில் லெபனான் – இஸ்ரேல் யுத்த நிறுத்தம் கடந்த 16 ஆம் திகதி அறிவிக்கப்பட, 17 ஆம் திகதி முதல் இந்நீரிணையை வர்த்தக கப்பல்களுக்கு முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்தது. அதனை வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கான ஹொர்முஸ் நீரிணை முற்றுகை நீடிக்கும் என்றார்.

அப்படியென்றால் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிடுவதாக 18 ஆம் திகதி அறிவித்த ஈரான், முற்றுகை நீடிக்கும் வரை பேச்சுவார்த்தையில் பங்குபற்றப் போவதில்லை என்றும் கூறியது. இதன் விளைவாக நேற்று (20 ஆம் திகதி) நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை திகதி நிர்ணயமின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் ஏ.பி.சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை 20ஆம் திகதி மாலை இஸ்லாமாபாத்தில் நடைபெறும். என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்புக்கு தலைமை தாங்க மாட்டார்’ என்றார்.

இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பேச்சுவார்த்தையின் நிமித்தம் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பாகிஸ்தான் ஏற்கனவே முன்னெடுத்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியி்ல பொலிஸ் மற்றும் இராணுவத்தை சேர்ந்த 20 ஆயிரம் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு அமெரிக்க விமானங்களும் ஏற்கனவே ராவல்பிண்டி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அப்படியிருக்கையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வான்ஸ் தலைமை தாங்கமாட்டார் என்று ட்ரம்ப் குறிப்பிட்டதன் மர்மம் என்ன? அவர் ஏன் அவ்வாறு கூறினார்? என்ற கேள்விகள் உலகளாவிய ரீதியில் மேலெழுந்த சூழலில் ஐ.நா. வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் மைக் வாட்ஸ், எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவர் என்று கூறிய ட்ரம்ப், இப்பேச்சுவார்த்தையின் ஏனைய பிரதிநிதிகளான ஜனாதிபதி ட்ரம்பின் விஷேட தூதுவர் விட்கொப்பும், ஜராட் குஷ்னரும் திங்களன்று மாலை இஸ்லாமாபாத்தை சென்றடைவர் எனவும் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக உப ஜனாதிபதி தலைமை தாங்கமாட்டார் என்ற அறிவிப்பு பலவிதமான ஐயங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த சூழலில், ‘இப்பேச்சுவார்த்தைக்கு உப ஜனாதிபதி தலைமை தாங்குவார்’ என்று வௌ்ளை மாளிகை அறிவித்தது.

‘இம்முறை பேச்சுவாரத்தைகளில் ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் அதன் ஒவ்வொரு மின்நிலையத்தையும் கட்டமைப்புக்களையும் பாலங்களையும் தாக்கியழிப்பேன். ஈரான் பேரழிவையே காணும். நான் நல்லவனாக இருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம்’ என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஹொர்முஸ் நீரிணையில் நெருக்கடி

ஆனால் ஈரான் அத்தகைய அச்சுறுத்தலுக்கு முன்பாகவும், ஹொர்முஸ் நீரிணை முற்றுகையை விலக்காவிட்டால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று உறுதிபடக் கூறியதோடு இஸ்லாமாபாத்துக்கான விஜயத்தையும் இரத்துச் செய்தது.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ஈரான் ஜனாதிபதி மசூட் பெஷஷ்கியானுடன் தொலைபேசியில் சுமார் 40 நிமிடங்கள் உரையாடியுள்ளார். இச்சமயம் இருபக்க உறவுகள் அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலவலகம் தெரிவித்தது.

இவ்வாறான சூழலில், சீனாவில் இருந்து ஓமான் வளைகுடா ஊடாக ஈரான் கொடி ஏற்றப்பட்ட டௌஸ்கா சரக்குக் கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அந்தக் கப்பலை அமெரிக்கா திடீரென கைப்பற்றியுள்ளது. ‘கப்பலை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் விடுத்த உத்தரவுகள் ஏற்கப்படாமல் மறுக்கப்பட்டதால், தங்கள் கடற்படை அக்கப்பலைச் செயலிழக்கச் செய்து கைப்பற்றியதாக ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், தங்கள் வீரர்கள் கப்பலை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், அதன் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘இது யுத்த நிறுத்த மீறல்’ என்றும் ‘கடற்கொள்ளை’ என்றும் குறிப்பிட்ட ஈரான், அமெரிக்க போர்க் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்களையும் மேற்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தளபதியான இப்ராஹிம் அஜிஸி, ‘ஹொர்முஸ் நீரிணை மீதான தங்கள் கட்டுப்பாட்டை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அது எங்களது பிரிக்க முடியாத உரிமை’ என்று பி.பி.சி. க்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளதோடு, ‘இந்நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான அனுமதி உட்பட, வழித்தட உரிமையை ஈரானே தீர்மானிக்கும்’ எனவும் கூறியுள்ளார்.

இத்தகைய கொதிநிலைக்கு மத்தியில் இருதரப்பு பேச்சுவார்த்தை மேலும் தாமதமடையுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முன்னெடுத்துள்ள ஹொர்முஸ் நீரிணை முற்றுகையானது, பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா நெடுகிலும் உள்ள அனைத்து ஈரானிய துறைமுகங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் இம்முற்றுகை நடைமுறைக்கு வந்தது முதல் 23 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் சனியன்று குறிப்பிட்டது.

அமெரிக்கா இந்நீரிணையை 10 ஆயிரம் கடற்படையினருடன் 13 போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்களைக் கொண்டு முற்றுகையிட்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் பங்குபற்ற வேண்டுமாயின் இந்த முற்றுகையை நீக்குமாறு ஈரான் கோரிக்கை முன்வைத்திருக்கின்ற சூழலில், வடக்கு அரபுக் கடலில் நிலை கொண்டுள்ள யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலுடன் யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். போர்ட் விமானம் தாங்கிக் கப்பல் மீண்டும் இணைந்துள்ளது. அத்தோடு யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் எச்.டப்ளியூ. புஷ் விமானம் தாங்கிக் கப்பல் தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைக் கடந்து மத்திய கிழக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு மேலதிக படையினரை அனுப்பவும் பென்டகன் ஏற்பாடுகளை ஏற்கனவே முன்னெடுத்திருக்கிறது.

ஆக, ஒருபுறம் பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று கூறும் அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம், மறுபுறம் விமானம் தாங்கிக் கப்பல்களையும் யுத்தக் கப்பல்களையும், போர் விமானங்களையும் போர்த் தளபாடங்களையும் அரபுக்கடல், ஒமான் கடல் மற்றும் வளைகுடாவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதனால் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை ஒப்பந்த முயற்சிகள் எல்லாம் மற்றொரு போர் ஏற்பாட்டுக்கான கால அவகாசத்தை எடுத்துக் கொள்வதற்கான உத்தியாக இருக்கலாமோ என்ற சந்தேகங்களும் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்குப் பல முட்டுக்கட்டைகள் நீடிக்கவே செய்கின்றன. பேச்சுவார்த்தையில் பிரதான தடையாக இருப்பது ஈரானின் அணுசக்தித் திட்டமாகும். ஈரான் தனது அணுசக்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலும் கைவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

அமெரிக்காவின் பிடிவாதமான நிபந்தனைகளை ஈரான் மறுப்பதோடு, அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்பட்டால் அவை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டும் என்று தெஹ்ரான் நிபந்தனை விதிக்கிறது. அடுத்தது ஈரான் அதிகம் செறிவூட்டியுள்ள யுரேனியத்தின் கையிருப்பாகும். ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் 400 கிலோ கிராம் கையிருப்பில் உள்ளது. அதனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் கூறுகிறார். இக்கோரிக்கையை தெஹ்ரான் நிராகரித்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ‘ஈரானின் புனிதப் பொருள்’ என்று பிரகடனப்படுத்தியுள்ள அந்நாட்டின் சபாநாயகர் முஹமது பாகர் கலிபாப், அதனை நாட்டின் எல்லையைத் தாண்டி எங்கும் கொண்டு செல்லவோ அல்லது வேறு எவரிடமும் ஒப்படைக்கவோ ஈரானியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஏற்கனவே தன்னிடம் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள நிலையில், ஈரான் மீது மட்டும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நாடு பாரிய அணுசக்தி பலத்தைக் கொண்டுள்ள நிலையில், மற்றுமொரு நாட்டின் அணுசக்தித் திட்டத்தை முடக்க முனைவது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோரிக்கை என்றே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஹொர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை தொடரும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முறையான உடன்பாடு எட்டப்படும் வரை இந்த முற்றுகை விலக்கப்பட மாட்டாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். இத்தகைய நேரெதிர் நிலைப்பாடுகள் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் ஈரான் மீதான தடைகளை நீக்குமாறும், முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களில் 20 பில்லியன் டொலர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ள ஈரான், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, சுமார் 270 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தச் சூழல் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 10 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், அந்தப் பதற்றங்கள் தணிந்த நிலையில் நேற்று ஆசியச் சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஹொர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பன இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களும் முறுகல் நிலையும் இரு நாடுகளைத் தாண்டி, முழு உலகிற்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகிறது. எனவே, உலக அமைதியைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினருக்கும் இடையிலான இந்தப் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்த்து வைக்க அனைத்துத் தரப்பினரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய இராஜதந்திர முயற்சிகள் சர்வதேச அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *