பங்களாதேஷ் மகளிரிடம் இலங்கைக்கு ஒருநாள் போட்டியில் முதலாவது தோல்வி

1 Min Read

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 3 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இலங்கை மகளிர் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் முதல்முறை வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

ராஜ்ஷாஹியில் நேற்று (20) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியின் ஆரம்ப வீராங்கனை இமேஷா துலானி 77 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றதோடு ஹன்சிமா கருணாரத்ன 71 பந்துகளில் 54 ஓட்டங்களைப் குவித்தார்.

இலங்கை வீராங்கனைகளின் மந்தமான துடுப்பாட்டத்தால் 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் மகளிர் அணி முதல் இரு விக்கெட்டுகளையும் 5 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் முதல் வரிசையில் வந்த ஷர்மின் அக்தார் நிதானமாக ஆடி 127 பந்துகளில் 13 பௌண்டரிகளுடன் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

சொபானா மொஸ்டரி 56 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் உபாதையால் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பங்களாதேஷ் மகளிர் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 206 ஓட்டங்களை எட்டியது. இலங்கை மகளிர் சார்பில் தெவ்மி விஹங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மல்கி மதார 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பங்களாதேஷ் மகளிர் அணியை இலங்கை இதற்கு முன்னர் நான்கு ஒருநாள் போட்டிகளில் எதிர்கொண்டபோதும் அதில் 3 இல் இலங்கை வென்றதோடு ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நாளை (22) இதே ராஜ்ஷாஹியில் நடைபெறவுள்ளது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *