‘ஹோர்முஸ்’ முட்டுக்கட்டைக்கு மத்தியில் ஈரான்–அமெரிக்க பேச்சில் இழுபறி நீடிப்பு

4 Min Read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தின் காலாவதி காலம் நெருங்கி இருக்கும் நிலையில் அமைதிச் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றபோதும் முக்கிய எரிபொருள் விநியோகப் பாதையாக உள்ள ஹோர்முஸ் நீரிணை பெரும் முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது.

ஈரான் இந்த நீரிணையை நேற்று மீண்டும் முழுமையாக முடக்கியதோடு ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகிறது.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்பட்டபோதும் இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் இருந்து தொலைதூரத்தில் இருப்பதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபஃப் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் ‘சிறந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக’ குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் இடம்பெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பாகிஸ்தானில் மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற வாய்ப்பு இருப்பதாக இரு பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளாக பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஈரானின் அணு விவகாரம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பிரதான முட்டுக்கட்டையாக உள்ளது என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் கலிபஃப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் பயணிப்பதற்கு அதனை திறக்கும் அறிவிப்பை ஈரான் கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்தது. எனினும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்தும் ஈரான் துறைமுகங்கள் மீது முற்றுகையை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி ஹோர்முஸ் நீரிணையை திறக்கும் முடிவை ஈரான் வாபஸ் பெற்றது.

இந்த நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இந்த குறுகிய நீர்ப் பாதை ஊடாக கப்பல் பயணங்கள் நேற்று (19) முடங்கியதாக கப்பல் பயணத் தரவுகள் காட்டுகின்றன.

சீனாவுக்கு சொந்தமான டாங்கர் ஒன்றும் இந்தியாவுக்குச் சொந்தமான எரிவாயு கப்பல் ஒன்றும் நேற்றுக் காலை கிழக்கை நோக்கி பயணித்தன. எனினும் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதோடு நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னர் எந்த ஒரு கப்பலும் வளைகுடாவுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ இல்லை என்று கப்பல் பயணம் தொடர்பான தரவுத் தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போர் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி தற்போது எட்டு வாரங்கள் எட்டி இருப்பதோடு, உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹொர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது எண்ணெய் விலையில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள இடைத் தேர்தலில் கொங்கிரஸ் அவையில் தற்போதுள்ள குறுகிய பெரும்பான்மையை தக்கவைக்கும் முயற்சியில் டிரம்பின் குடியரசு கட்சி முயன்று வருகிறது. எனினும் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்ந்து, பணவீக்கமும் அதிகரித்திருப்பதோடு டிரம்பின் சொந்த மதிப்பீடுகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

சிரேஷ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்த டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா ‘சிறந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக’ குறிப்பிட்டபோதும் அது தொடர்பில் வேறு விபரங்களை கூறவில்லை.

மறுபுறம் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலிபஃப், அரச ஊடகத்தில் பேசியபோது கூறியதாவது, ‘நாம் வலியுறுத்தும் சில பிரச்சினைகள் உள்ளன… அவர்களுக்கும் தங்களுடைய மீற முடியாத வரம்புகள் உள்ளன. ஆனால் இந்த பிரச்சினைகள் ஒன்றோ அல்லது இரண்டோ மட்டுமே இருக்கலாம்’ என்றார்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவியதோடு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இரண்டு வார போர் நிறுத்தம் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் புதன்கிழமை (22) முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போரின் மற்றொரு முனையாக லெபனான் மீதான இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு 10 நாள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் தெற்கு லெபனானின் பின்த் ஜபைல் நகரில் கட்டடங்களை இடித்து வரும் இஸ்ரேலியப் படை ஹிஸ்புல்லா போராளிகளுடன் உக்கிர மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முற்றுகையில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கை போன்று தெற்கு லெபனானிலும் ‘மஞ்சள் கோட்டு’ எல்லை ஒன்று நிறுவப்பட்டிருப்பதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர் இஸ்ரேல் அங்கு நிறுவிய மஞ்சள் கோட்டு எல்லை பலஸ்தீன பகுதியை பிரிக்கும் வகையில் வடிவைக்கப்பட்டது. லெபனானிலும் இவ்வாறான நடவடிக்கை ஒன்று குறித்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிடுவது இது முதல் முறையாக உள்ளது.

இவ்வாறான மஞ்சள் எல்லையை நெருங்குபவர்கள் மீது இஸ்ரேலியப் படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதோடு தனது கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் கட்டடங்களை தகர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *