சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியின் உபாதைக்கு உள்ளான வேகப்பந்து சகலதுறை வீரர் பிரைடன் கார்ஸுக்கு பதில் இலங்கையின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க இணைக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய நாணயப்படி 75 இலட்சம் ரூபா ஒப்பந்தமாக சன்ரைசஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ஸ் 2026 வீரர் ஏலத்தில் சன்ரைசஸ் அணியால் தக்கவைக்கப்பட்டபோதும், பெங்களூரு அணியுடனான ஆரம்ப போட்டிக்கு முன்னதாக வலைப் பயிற்சியின்போது வலது கையில் உபாதைக்கு உள்ளானார். அவர் மீண்டு அணிக்கு திரும்புவார் என அந்த அணியின் பயிற்சியாளர் டானியல் விட்டோரி எதிர்பார்த்தபோதும் அது நடக்கவில்லை.

மதுஷ்க இதுவரை இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 19 டி20 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 70 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மதுஷங்க 2024 பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று உபாதையால் அந்தப் பருவத்தில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதில்லை.
இதன்படி சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியில் இணையும் மூன்றாவது இலங்கை வீரர் டில்ஷான் மதுஷங்கவாவார். ஏற்கனவே அந்த அணியில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹைத்ராபாத் அணி இதுவரை ஆடிய 5 ஐபிஎல் போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.




