ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போரை அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போர்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.
பயங்கரவாத அமைப்புகள் மூலம், ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தது.

இதனையடுத்து, கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான் வழி தாக்குதல் நடத்தியது. இதில், 80க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக நேற்று இரவு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் 50க்கும்அதிகமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிப்படையான போர்
மேலும், உயிரிழந்த வீரர்களின் உடல்கள் ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பல வீரர்கள் உயிருடன் கைது செய்யப்பட்டதாகவும், கனரக ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளங்களை கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பதிலடி தாக்குதலை மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் கந்தகாரில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களது பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. இது ஆப்கானிஸ்தான் மீதான வெளிப்படையான போர் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் நல்ல அண்டை நாடுகளின் கொள்கைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐ.நா. தலைவர் குட்டெரெஸ், தாக்குதலைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 133 ஆப்கானிஸ்தான் தாலிபான் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், 27 ஆப்கானிய நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், 9 கைப்பற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.




