ஜனாதிபதி அநுரகுமாரவின் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் கொடுத்தவாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை என்பதோடு அதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகளைக் கூட முன்னெடுக்கவில்லை. மாறாக அதிகாரங்களை தமக்குள்ளே வைத்துக்கொள்ளும் வகையிலும் ஒருகட்சி ஆட்;சியை மையப்படுத்தும் நகர்வுகளும் தீவிரமடைந்து வருவதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் கண்டன உண்ணாவிரத போராட்டம் சாவகச்சேரியில் நேற்றையதினம் காலை எட்டு மணி முதல் மாலை வரையில் நடைபெற்றது.
இதில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளித்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன், க.சர்வேஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப்போராட்டமானது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துதல், உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான பிரஜா சக்தி முறைமையை உடனடியாக நிறுத்துதல், இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மாகாண சபைத் தேர்தலை நடத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில், அநுர அரசாங்கம் ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்கே முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்பது இரண்டாண்டுகளில் மிகத்தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எமது போராட்டம் அம்பலப்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அநுர அரசாங்கமானது எமது அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு மறுதலித்து, எமது உணர்வுகளை உரசிப்பார்க்கின்ற செயற்பாடுகளை தந்திரமாகவும் நாகரீகமாகவும் முன்னெடுகின்றது. நிலங்களை இழந்து எம்மால் தலைநிமிர்ந்து வாழ முடியாது. எமது மக்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றார்கள். மனிதப்புதைகுழிகளுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. எமது பிரச்சினைகளை ஒதுக்கி சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்இன் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில், ஆட்சியில் இருப்பது தேசிய மக்கள் சக்தி என்று கூறினாலும் ஆட்சியில் உண்மையாக இருப்பது ஜே.வி.பியினர் தான். ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக அநுர தலைமையிலானவர்கள் வழங்கிய உறுதி மொழிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றியிருந்தால் தையிட்டி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான் ஆகிய பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அரசு அதனைச் செய்யவில்லை. மாறாக உள்ளுராட்சி மன்றங்களை முடக்குவதற்கு பிரஜாசக்தியையும், மாகாண சபைகளை தேர்தல் முறைமை மாற்றம் என்ற பேரில் தெரிவுக்குழுவையும் நியமித்தும் பயன்படுத்திக்கொண்டு ஆளுநர் ஊடாக ஆட்சியை முன்னெடுப்பதற்கு முனைகின்றார்கள்.
அநுரவின் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்றார்கள். ஆனால் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பதிலாக மேலும் மேலும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கின்றன. ஆகவே எந்தவொரு மாற்றங்களையும் அநுர அரசு செய்யவில்லை என்பதை தமிழ் மக்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தெளிவாக இப்போராட்டம் மூலமாக சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்றார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான சமத்துவக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம் என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஆசனத்தில் அமர்ந்தவுடன் அதன் அசுர பலத்தை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு பெரும்பான்மை பாராளுமன்ற பலமும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி அடிப்படைய இனவாதத்தின் கூட்டமாகவே ஜே.வி.பி இருக்கின்றது. ஆகவே இவை அனைத்தினதும் திரட்சியாகவுள்ள முகத்தைக் கொண்டவர்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்மானத்தை வழங்குவார்கள் என்று கருதினால் அது முட்டாள்தனமானது என்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கமானது, தனது இரண்டு வருட ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புக்களைக்கூட முறையாக வழங்கவில்லை. உதாரணமாக மாகாண சபைத்தேர்தலை எடுத்துக்கொண்டால் காலநீடிப்பு என்ற பெயரில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. அதுமட்டுமன்றி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைவரும் இலங்கையர்கள் என்ற விடயத்தினை தான் முன்னிலைப்படுத்துகின்றது.அதன் மூலமாக தனியான இனத்துவ அடையாளங்களை ஏனைய இனங்கள் இழக்க வேண்டும் என்ற கோட்பாட்டையே முன்னிறுத்துகின்றது. அந்தவகையில் தமிழ் மக்களின் விடயங்களுக்கான தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்படுகின்றன என்பதை வெளிப்படையாகக் கூறுகின்றேன் என்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில்,
கடந்த தேர்தலில் மூன்றாம் தரப்பாக இருந்து தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்றவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிராக் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள் அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் அவ்வளவு மும்முரமாகவும் துணிவாகவும் அதையெல்லாம் செய்யத் துணிந்தவர்கள் தமிழ் மக்களுக்குடைய எந்த விடயத்தையும் தெட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கின்றார்கள்.
நான் பலாலியில் இருந்து வந்ததவர்களை சந்தித்தபோது அவர்கள் சொன்னார்கள் ஐயா உங்களுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை இந்த அரசாங்கத்திற்குத்தான் வாக்களித்தோம் என்றார்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டபோது இந்த அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் என்று கூறினார்கள்.
காணிகளை விடுவிப்பது எவ்வளவு இலகுவான விடயம். அதனை யாராவது எதிர்த்தார்களா தெற்கில் கூட எவராவது எதிர்த்தார்களா இல்லையே சுலபமாக செய்யக்கூடிய விடயம். ஆனால் எங்களுடைய வாழ்வுக்கு அத்திவாரமாக இருக்கின்ற எங்ளுடைய நிலங்களை விடுவிக்காமல் மற்ற விடயங்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றமையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறியிருக்கின்றார்கள். அந்தக்காணிகள் எவை என்று அடையாளப்படுத்திக்காட்டச் சொன்னால் அவை அத்தனையும் 2024ஆம் ஆண்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளாக உள்ளன. இரண்டு வருடத்திற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட காணிகளை நாங்கள் விடுவிக்கப்போகின்றோம் என்று கூறுகின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே விடுவித்த 613மீற்றர் வீதியை மீண்டும் விடுத்தது போன்று தான் நிலைமை உள்ளது.
காணி விடுவிப்பில் ஜனாதிபதி அநுர தற்போது இராணுவத்திடம் கேட்கவேண்டும் என்று கூறினார். எங்களுடன் எதிர்க்கட்சியில் இருக்கும் போது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கத்தினார். அப்போது இராணுவத்திடம் கேட்கவேண்டும் என்று கூறவில்லை.
அநுரவின் தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கின்ற முதலாவது வாக்குறுதி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்பது தான். அந்த விடயத்தினை தற்போது வரையில் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை.
ஆனால் பௌத்த மதபீடத் தலைவர்களே செய்ய வேண்டாம் என்று கூறுகின்ற 22 ஆவது திருத்தச் சட்டத்தை முன்னெடுக்கின்றார்கள். அந்தளவுக்கு துணிவு இருக்கும் அநுரவுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான தனிநபர் சட்டமூலத்தைக் கொண்டுவந்தவர்களால் அதனைச் செய்வதற்கு தற்போது முடியவில்லை.
ஆகவே அவர்கள் தமது ஆட்சியை ஒரு கட்சி ஆட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கின்றாhகள் என்பதை நான் அமரர் தர்மலிங்கத்தின் நினைவுப்பேருரையில் குறிப்பிட்டேன்.
தற்போது அதிகாரப்பகிர்வு இல்லை. அதிகாரங்களை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இரண்டாவது வாக்குறுதியாக ஒரு வருடத்தக்குள்ளேயே மாகாண சபைத்தேர்தலை நடத்துவேன் என்று வழங்கப்பட்டது. தற்போது வரையில் அதற்கான எந்தவொரு விடயங்களையும் முன்னேற்றகரமாக முன்னெடுக்கவில்லை. கால இழுத்தடிப்புத்தான் நடைபெறுகிறது.
நாங்கள் ஐந்து விடயங்களுக்காககத்தான் போராடுகின்றோம். நாங்கள் இலஞ்ச ஊழலுக்காக போராடவில்லை வேறு தனிப்பட்ட முயற்சிகளுக்காக போராடவில்லை. ஐந்து கோரிக்கைக்கும் முழுமையான ஆதரவை நாங்கள் கொடுக்கின்றோம். மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சிகளுடன் பேசுவேம் தெடர்ந்தும் போராடுவோம் என்றார்.



