மகளிர் ஆசிய கிண்ணம் டுபாயில் இன்று ஆரம்பம்

2 Min Read

இலங்கை அணி நடப்புச் சம்பியனாக பங்கேற்கும் மகளிர் டி20 ஆசிய கிண்ணத் தொடர் முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் அனைத்துப் போட்டிகளும் டுபாயில் இடம்பெறவுள்ளன. இதன்படி மொத்தம் 15 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, 12 குழு நிலைப் போட்டிகளுடன் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும். எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குழு நிலை போட்டிகளில் அனைத்து தினங்களிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. செப்டெம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் அரையிறுதி போட்டிகளுடன் இறுதிப் போட்டி செப்டெம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்க விருப்பதோடு தலா நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டே குழுநிலைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பி குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை அணியுடன் அந்தக் குழுவில் பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தோனேசிய அணிகள் பங்கேற்கின்றனர். ஏ குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான, ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு நிலையில் ஓர் அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதுவதோடு முதல் இரு இடங்களைப் பிடிப்பும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இன்று நடைபெறும் ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகும் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நாளை (29) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளும்.

கடைசியாக 2024 இல் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியே இலங்கை மகளிர்கள் கிண்ணத்தை கைப்பற்றி இருந்தனர். எவ்வாறாயினும் மகளிர் டி20 ஆசிய கிண்ண தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதோடு இதுவரை நடந்த ஐந்து தொடர்களில் அந்த அணி கிண்ணத்தை கைப்பற்றியது. மற்றொரு முறை பங்களாதேஷ் அணி வெற்றியீட்டி இருந்தது.

இந்திய மகளிர்கள் அதிக வெற்றி வாய்ப்புக் கொண்ட அணியாக இருப்பதோடு சமரி அத்தப்பத்து தலைமையிலான இலங்கை அணி அதற்கு சவால் கொடுக்கும் வகையில் உள்ளது. குழுநிலையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சவாலாக இருந்தபோதும் இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 17 டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியா 14 போட்டிகளில் வென்றுள்ளது.

மறுபுறம் பி குழுவில் இலங்கைக்கு வலுவான எதிரணியாக பங்களாதேஷ் உள்ளது. எனினும் இரு அணிகளும் இதுவரை ஆடிய 16 போட்டிகளில் இலங்கை 13 இல் வெற்றியீட்டியுள்ளது. எனவே குழுநிலையில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பது அரையிறுதியிலேயே இந்தியாவை எதிர்கொள்ளும் நெருக்கடியை தவிர்ப்பதற்கு உதவும்.

இதில் பங்கேற்றிருக்கும் இணை அங்கத்துவ நாடுகள் மகளிர் கிரிக்கெட்டில் அதிக பரீட்சயம் கொண்ட அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *