உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் தரங்க

1 Min Read

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் சிறிது காலம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்த இலங்கையின் ருமேஷ் தரங்க மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

புதுப்பிக்கப்பட்டிருக்கும் தரவரிசையின்படி 1,363 தரநிலைப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் தரங்க, 1,342 புள்ளிகளுடன் உள்ள ஜெர்மனியில் ஜூலியன் வெபரை 21 புள்ளிகள் வித்தியாசத்தில் 2ஆவது இடத்திற்கு பின்தள்தள்ளி முதல் இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார். கிரனடாவின் அன்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அண்மையில் நடந்த டயமன்ட் லீக் போட்டியில் தரங்கவுக்கு கடும் சவால் கொடுத்த இந்தியாவின் நீரஜ் சொப்ரா 1,301 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

வெபர் ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்ற ஐரோப்பிய தடகள போட்டி ஒன்றில் 90.40 மீற்றர் தூரத்தை எறிந்ததை அடுத்தே கடந்த வாரம் தரங்கவை பின்தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருந்தார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற லோசான் டயமன்ட் லீக்கில் 88.14 மீற்றர் தூரம் எறிந்த தரங்க தங்கப் பதக்கத்தை வென்றதை அடுத்தே மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

தரங்க இந்த மாத ஆரம்பத்திலேயே உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருந்தார். இது உலக தடகள தரவரிசை ஒன்றில் இலங்கை வீரர் ஒருவர் முதல் இடத்திற்கு முன்னேறும் முதல் சந்தர்ப்பமாகவும் இருந்தது.

இந்த பருவத்தில் உலக ஈட்டி எறிதலில் அதிக தூரம் எறிந்த வீரராக சாதனையை தக்கவைத்திருக்கும் தரங்க அண்மையில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அவர் லோசான் டயமன்ட் லீக்கில் தங்கப் பதக்கம் வென்றிருப்பது இந்தப் பருவத்தில் அவரது மூன்றாவது டயமன்ட் லீக் வெற்றியாகும். முன்னதாக அவர் ரோம் டயமன்ட் லீக்கில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றதோடு தொடர்ந்து டோஹா டயமன்ட் லீக்கையும் வென்றிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *