பசுபிக் சமுத்திர தீவு நாடுகளில் சீனா பின்பற்றி வந்த உத்திகளில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Japan Forward இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உட்கட்டமைப்பு கடன்களை வழங்குவதற்குப் பதிலாக, சிறிய மானியங்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் தனது செல்வாக்கை சீனா பலப்படுத்தி வருகிறது.
முன்பு தொங்கா, சாமோவா, வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட பெரிய கடன் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளுக்கு சிறிய அளவிலான நிதியுதவிகளை வழங்கி உள்ளூர் மட்டத்தில் சீனா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது.
2019 முதல் சாலமன் தீவுகள், கிரிபாட்டி மற்றும் நவ்ரூ ஆகிய நாடுகள் தாய்வானுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக்கொண்டு, சீனாவுடன் உத்தியோகபூர்வமாக கோர்த்துள்ளன.
2022-ஆம் ஆண்டு சாலமன் தீவுகளுடன் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1,170-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சீனா பயிற்சி அளித்துள்ளது. இப் பயிற்சி திட்டங்கள் அந்நாட்டின் 8 மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
சீனாவை முற்றிலும் தனிமைப்படுத்தும் உத்தி பலனளிக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் பசுபிக் நாடுகளுக்கு விரைவான, வெளிப்படையான நிதி உதவிகளையும் தொழில்நுட்ப ஆதரவையும் மாற்று வழிகளாக வழங்க வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளது.




