ஈஸ்டர் தாக்குதல்; எதிர்த்தரப்பு சாட்சியங்களின் விசாரணைகள் நேற்று முதல் ஆரம்பம்

2 Min Read

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு சாட்சியங்கள் குறித்து தினசரி விசாரிக்கப்படவுள்ளன. இந்த விசாரணைகள் நேற்று (17) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின. இவ்விசாரணைகள் கொழும்பு மேல்நீதிமன்றதில் இடம்பெறும். நிரந்தர நீதியரசர்கள் மூவர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதையடுத்து, வழக்கை விசாரிக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நீதிபதிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த 24 பேருக்கும் எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் குறித்த எதிர்த்தரப்பு சாட்சியங்களின் விசாரணைகளே நேற்று ஆரம்பமாகின. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் நீதிபதிகளான சுஜீவ நிசங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறும்.இந்த வழக்கில் அரசுத் தரப்பின் சார்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளனர்.

அரசுத் தரப்பின் இறுதி சாட்சியம் கடந்த 13ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து சட்டமா அதிபர் சார்பில் வழக்கை முன்னெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்ரியா ஜயசுந்தர, அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதனையடுத்து, ஐந்து ஆண்டுகள் (547 நாட்கள்) நீடித்த அரசுத் தரப்பு சாட்சிய விசாரணைகள் நிறைவடைந்தன .இந்நிலையிலே எதிர்தரப்பு சாட்சியங்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரதிவாதிகளுக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து நீதிமன்றம் நேற்று விளக்கியது.

தேவைப்பட்டால் சாட்சிக் கூண்டில் ஏறி சத்தியப்பிரமாணத்தின் கீழ் சாட்சியமளிக்க முடியும் என்றும் அவ்வாறு வழங்கப்படும் சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஊடாக நீதிமன்றம் விளக்கியது.

அதேவேளை, சாட்சிக் கூண்டில் ஏறாமல் பிரதிவாதிகள் அமரும் கூண்டிலிருந்தே சாட்சியமளிக்க முடியும். இவ்வாறு வழங்கப்படும் சாட்சிகள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படாது. மேலும், மேற்கண்ட எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் மௌனமாக இருக்கவும் பிரதிவாதிகளுக்கு உரிமை உள்ளதாக நீதிமன்றம் விளக்கியுள்ளது. இதனையடுத்து பிரதிவாதிகள் தங்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் 25 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது 24 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 24 பிரதிவாதிகளுக்கும் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி குற்றப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்15ஆம் திகதி குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன.

வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் வழங்கிய சில ஒப்புதல் வாக்குமூலங்கள் தன்னார்வத்துடன் வழங்கப்பட்டுள்ளதாக, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஒப்புதல் வாக்குமூலங்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 பொருட்கள் வழக்குப் பொருட்களாக குறிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள், டிஎன்ஏ (DNA) அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சஹ்ரானின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் உறுப்பினராக இருந்த ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி தாக்குதல்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசு தரப்பு சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *