ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஐந்து மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற சூழல் நீடித்து வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீதான அண்மைய தாக்குதல் சர்வதேச வலுசக்தி நெருக்கடியை தொடர்ந்தும் நீடிப்பதாக உள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக கடந்த திங்களன்று (03) கூறிய டிரம்ப், சிறந்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு ஈரானுக்கு வழங்கப்படும் ‘கடைசி வாய்ப்பு’ என்றும் எச்சரித்தார். எனினும் அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவில்லை என்றும் அதற்கான திட்டம் இல்லை என்றும் ஈரான் மறுத்துள்ளது.
‘தற்போது (பேச்சுவார்த்தை) இடம்பெற்று வருகிறது’ என்று வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து கேட்கப்பட்டபோது, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளின் பேரிலேயே இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
‘சிறந்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அவர்களுக்கு (ஈரான்) இதுவே கடைசி வாய்ப்பாகும்’ என்றும் குறிப்பிட்டார். ஈரான் மீதான பாரிய தாக்குதலை நிறுத்தி வைத்ததாக டிரம்ப் முன்னதாக குறிப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் முதலில் பாரிய அளவிலான தாக்குதல்களை மேற்கொள்வதாக உறுதியளித்து பின்னர் அவற்றை ரத்து செய்யும் அவரது வழக்கமான அணுகுமுறையை மீண்டும் பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி, அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்றும் கடந்த திங்களன்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இழுபறிக்கு மத்தியில் தாங்களே உருவாக்கிக் கொண்டுள்ள ஈரான் தொடர்பான சிக்கலான நெருக்கடியிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் தடுமாறி வருவதாகத் தெரியவருகிறது.
கடந்த திங்கட்கிழமை வெளியான சி.என்.என். தொலைக்காட்சி செய்தியின்படி, அமெரிக்க இராணுவம் தற்போது பல்வேறு இராணுவ நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளையும் யோசனைகளையும் திரட்டிவருகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்பும் வகையிலான ஓர் உடன்பாட்டை ஏற்க ஈரானை எவ்வாறு நிர்பந்திப்பது என்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
‘ஈரானுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து அதற்கு தண்டனை அளிப்பதற்கான புதிய, புதிய திட்டங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளை நாங்கள் தேடி வருகிறோம்’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஓர் அதிகாரி கடந்த வாரம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சி.என்.என். தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஈரான் உலகின் ஐந்தில் ஒரு எரிபொருள் விநியோகங்கள் செல்லும் ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து முடக்கியுள்ளது. இந்நிலையில் ஓமான் கடற்கரைக்கு அண்மித்த ஹோர்முஸ் நீரிணை அருகே, அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிகணை போன்ற பொருள் தாக்கியதாக ஒரு சரக்குக் கப்பல் அவசர தகவல் அனுப்பியதாக, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து மந்தநிலையிலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அந்த நீரிணையை ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றன. அவற்றில் மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களும், மூன்று மொத்த சரக்கு கப்பல்களும் அடங்கும். இது முந்தைய நாளில் பதிவான ஏழு கப்பல்களிலிருந்து குறைந்துள்ளதாக கண்காணிப்பு நிறுவனமான ‘கிப்ளர்’ தரவுகள் காட்டுகின்றன.
மறுபுறம் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த முற்றுகை தொடர்வது குறித்து ஈரான் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமனேயின் இராணுவ ஆலோசகரான மொஹசின் ரெசாயி எச்சரித்துள்ளார். ‘முற்றுகை தொடர்ந்து நீடித்தால், அமெரிக்கக் கப்பல்களும் அமெரிக்கப் படைகளும் கடுமையான அபாயங்களையும் உயிரிழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும்,’ என்று ரெசாயி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
‘அமெரிக்கா தனது நடவடிக்கைகளையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் – இல்லையெனில் இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கடல் வழித்தடத்தைத் திறக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஜூன் மாதத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பான முரண்பாடுகளால் சிதைந்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை மீண்டும் ஆரம்பித்தது.
அதன் பின்னர் குறைந்தது 44 கப்பல்களின் பயணப் பாதையை மாற்றியுள்ளதாகவும், இரண்டு கப்பல்களை செயலிழக்கச் செய்துள்ளதாகவும், மேலும் இரண்டு கப்பல்களில் ஏறி சோதனை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.இருப்பினும், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தணிந்து வருவதாக ஏற்பட்ட நம்பிக்கை, காரணமாக எண்ணெய் விலை மேலும் குறைத்தது. அதே நேரத்தில், முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.




