ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இன்று (30) நடைபெறும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையறுதிப் போட்டியில் இலங்கையின் காலிங் குமாரகே பற்கேவுள்ளார்.
இலங்கையின் 400 மீற்றர் ஓட்டத்தில் முன்னணி வீரராக உள்ள குமாரகே நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஆரம்ப சுற்றில் பங்கேற்றிருந்தார். 5ஆவது ஆரம்ப சுற்று போட்டியில் இடம்பிடித்திருந்த அவர் போட்டித் தூரத்தை 46.28 விநாடிகளில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதில் போட்டித் தூரத்தை 45.72 விநாடிகளில் நிறைவு செய்த டிரினிடாட் மற்றும் டொபேகோ அணியின் ஜரீம் ரிசட்ஸ் முதல் இடத்தை பெற்றிருந்தார்.
இதன்படி ஆரம்பச் சுற்றுப் போட்டியின் ஒட்டுமொத்த வீரர்கள் வரிசையில் காலிங்க குமாரகே 11 ஆவது இடத்தைப் பிடித்தே அறையிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 5.40 இற்கு இடம்பெறவுள்ளது.
பொதுநலவாய போட்டிகளில் இலங்கை வீரர்கள் இதுவரை சோபிக்காத நிலையில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பாக உள்ள ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று போட்டியில் களமிறங்கவுள்ளார். இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.55 மணிக்கு ஆரம்பமாகும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் ஆரம்பச் சுற்றில் தரங்க மொத்தம் 18 வீரர்களுடன் போட்டியிடவுள்ளார்.
அண்மைக் காலமாக சர்வதேச போட்டிகளில் சோபித்து வரும் தரங்க, சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசையில் தற்போதும் இரண்டாது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சிறந்த சாதனையாக 92.62 மீற்றர் தூரம் எறிந்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்த ஆண்டில் பதிவான சிறந்த சாதனையாகவும் இது உள்ளது.
இம்முறை பொதுநலவாய ஈட்டி எறிதலில் நடப்புச் சம்பியனான பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் (92.97 மீ.), கிரேனடாட்டின் அண்டர்சன் பீட்டர்ஸ் (93.07 மீ.) மற்றும் இந்தியாவின் நீராஜ் சொப்ரா (90.23 மீ.) ஆகியோர் தரங்கவுக்கு கடுiமான போட்டியாளர்களாக உள்ளனர்.
எனினும் இந்தப் பருவத்தில் சிறந்த பெறுபேறை வெளிப்படுத்தி இருக்கும் ருமேஷ் தரங்க, 1998 இல் ஷிரியானி குலவன்ஷ 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் பொதுநலவாக தடகளப் போட்டி ஒன்றில் இலங்கைக்காக முதல் பதக்கத்தை வென்றுகொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தரங்கவுடன் சுமேத ரணசிங்கவும் இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ளார். சுமேதவின் தனிப்பட்ட சாதனையாக 85.78 மீற்றர் தூரம் எறிந்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை கடைசியாக 2006 ஆம் ஆண்டிலேயே தங்கப் பதக்கம் ஒன்றை வென்றது. அது ஆண்களுக்கான 62 கிலோகிராம் பளுதூக்கல் போட்டியில் சிந்தன விதானகே பெற்ற பதக்கமாகும். எனினும் தடகளப் போட்டி ஒன்றில் இலங்கை சார்பில் கடைசியாக 1950 இல் ஆண்களுக்கான 440 யார்ட் தடைதாண்டல் போட்டியில் டங்கன் வைட் தங்கப் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார்.
இன்று நடைபெறும் ஈட்டி எறிதால் ஆரம்பச் சுற்றைத் தொடர்ந்து தகுதி பெறும் வீரர்களுக்கான இறுதிப் போட்டி நாளை (31) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




