உலகின் மிக வயதான தொழில்முறை கால்பந்து வீரரான ஜப்பானைச் சேர்ந்த 59 வயது கசுயோஷி மியுரா நான்கு ஆண்டுகளின் பின்னர் முதல் கோலை புகுத்தியுள்ளார்.
ஜப்பானின் மூன்றாம் நிலை அணியான புகுஷிமா யுனைடெட் அணிக்காக ஆடும் மியுரா, நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இவாக்கி புருகாவா அணிக்கு எதிரான போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார். இந்தப் போட்டியில் புகுஷிமா யுனைடெட் 7–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
2022 நவம்பரில் ஒசாக்கா அணிக்கு எதிராக அப்போது சுசுகா அணிக்காக பெற்ற கோலுக்கு பின்னர் மியுரா பெறும் முதல் கோலாக இது இருந்தது.
1986 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டு அணியான சான்டோஸுக்காக முதல் முறை தொழில்முறை கால்பந்தில் ஆடிய மியுரா தொடர்ந்து இத்தாலி, குரோஷியா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துக்கல் நாட்டு கழகங்களிலும் ஆடியுள்ளார். பின்னர் 1993 இல் ஜப்பானின் ஜே-லீக் கால்பந்து லீக் ஆரம்பித்தபோதும் அதில் இணைந்தார்.
ஜப்பான் தேசிய அணிக்காக 1990 தொடக்கம் 2000 வரை ஆடி இருக்கும் மியுரா 89 போட்டிகளில் 55 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




