ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

2 Min Read

ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவது  தொடர்பாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்  ரஷ்யாவின் விசேட பிரதிநிதிகள் குழுவுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக   இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கூட்டாட்சியின் தேசிய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான NOSTROY-ஐ பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. இதன்போது, ரஷ்ய கட்டுமானத் துறைக்கான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு  செய்யும் முக்கிய மூல நாடாக இலங்கையை பரிசீலிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைக்கு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, ரஷ்ய பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் உள்ள திறன்மிக்க மற்றும் அரைத் திறன்மிக்க தொழிலாளர் படை, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி முறைமை, சர்வதேச தொழிலாளர் சந்தைக்கேற்ற பணியாளர்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி  நிறுவனங்கள் வகிக்கும் பங்கு ஆகியவற்றை அவர் விரிவாக விளக்கினார்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு நீண்டகாலமாக தொழிலாளர்களை அனுப்பி வரும் இலங்கையின் அனுபவத்தையும், இலங்கைத் தொழிலாளர்களின் தரம், நம்பகத்தன்மை மற்றும் புதிய சூழல்களுக்கு தழுவிக்கொள்ளும் திறனையும் அவர் சுட்டிக்காட்டினார்.NOSTROY அமைப்பின் தலைவர் அன்டன் நிகொலாயெவிச் க்ளுஷ்கோவ் (Anton Nikolaevich Glushkov),   ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர், ரஷ்ய கட்டுமானத் துறைக்கு இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராய NOSTROY அமைப்பு தீர்மானித்ததாக  கூறினார்.

மேலும், NOSTROY ரஷ்யாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்புகளில் ஒன்றாகும் என்றும், வீடமைப்பு, சிவில் மற்றும் தொழில்துறை கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 105-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சங்கத்தின்   தலைவரும் கலந்துகொண்டார்.நிகழ்ச்சியின் நிறைவில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதிநிதி நிறுவனம் (தனியார்) சார்பில் அதன் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி மற்றும் ரஷ்யாவின் NOSTROY அமைப்பின் தலைவர் அன்டன் நிகொலாயெவிச் க்ளுஷ்கோவ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் நிலவும் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்து பணியில் அமர்த்துவதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *