அரச சேவையை மேலும் தரமான, திறன்மிக்க மற்றும் ஊழலற்ற முன்மாதிரி நிர்வாகக் கட்டமைப்பாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நேர்மை சேவை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஒன்றை வெளியிட்ட பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கும் அமைச்சாக, நல்லாட்சியும் நேர்மையும் கொண்ட அரச சேவையை உருவாக்குவதற்கு தமது அமைச்சு முழுமையான பங்களிப்பை வழங்கும் என தெரிவித்தார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் அரச சேவையின் நேர்மையும் பொறுப்புணர் வும் மிக முக்கியமானதாகும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் போன்ற மிகுந்த உணர்வுபூர்வமான சம்பவங்களில் அரச அதிகாரிகள் தாமதமின்றி, மனசாட்சிக்கு இணங்கவும் உயர்ந்த ஒழுக்கநெறியுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாகாத வகையில், அவர்களின் இரகசியத்தன்மையும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்ட நிலையில் சேவைகளை வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள், பெண்கள் பாதுகாப்பு மையங்கள், பராமரிப்பு நிலையங்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நிதி மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மையை தொடர்ந்து பேணுவதோடு, வெளிப்புற அழுத்தங்களோ அல்லது ஊழலோ இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கும் நலன்களை எதிர்பார்ப்போருக்கும் பாரபட்சமின்றி நீதி வழங்குவதற்கு அரசியல்வாதிகளும் அரச ஊழியர்களும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




