லங்கா பிரீமியர் லீக் தொடரில் அணித் தலைவர் கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தம்புள்ளை சிக்ஸர்ஸுக்கு எதிராக கொழும்பு கெப்ஸ் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு கெப்ஸ் சார்பில் மத்திய வரிசையில் வந்த கமிந்து 39 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த தினேஷ் சந்திமால் தலைமையிலான தம்புள்ளை சிக்ஸர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களையே பெற்றது.
கொழும்பு கெப்ஸ் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் கோல் கலன்ட்ஸ் அணிக்கு எதிராக கண்டி றோயல்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கோல் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பதிலெடுத்தாடிய கோல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களையே சேர்த்தது.




