லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) கிரிக்கெட் தொடரில், கொழும்பு கெப்ஸ் அணிக்காகத் தனது கன்னிப் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் ஷாருஜன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்று முன்தினம் (22) நடந்த போட்டியில் களமிறங்கிய அவர், எதிர்கொண்ட 17 பந்துகளில் 26 ஓட்டங்களை விளாசித் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஷாருஜனின் இந்த அறிமுகப் போட்டியில், அவரது சிறப்பான ஆட்டத்தைக் காட்டிலும் மைதானத்தில் அரங்கேறிய மற்றொரு நெகிழ்ச்சியான தருணம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளது.
ஷாருஜனின் தந்தையும் பிரபல புகைப்படக் கலைஞருமான சண்முகநாதன், தனது மகனின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிமுக ஆட்டத்தை மைதானத்தில் இருந்தவாறே தனது கேமராவுக்குள் பெருமிதத்துடன் படம்பிடித்துள்ளார். மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்துகொண்டிருந்த வேளையில், புகைப்படக் கலைஞர் சண்முகநாதன் தனது லென்ஸ் வழியே மகனின் ஒவ்வொரு நகர்வையும், ஓட்டங்களையும் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு தந்தையாகத் தனது மகனின் உழைப்பையும், நாட்டின் முன்னணி கிரிக்கெட் தொடரில் அவர் தடம் பதிக்கும் வரலாற்றுத் தருணத்தையும் புகைப்படக் கலைஞராகத் தன் கேமராவுக்குள் சிறைபிடித்த காட்சி, விளையாட்டுத்துறை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இளம் வீரர் சாருஜனின் இந்த சிறப்பான தொடக்கம், அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




