இந்திய இளையோர் அணிக்கு எதிராக இலங்கை அணிக்கு தொடர் தோல்வி

1 Min Read

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இராண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் 211 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை 1–0 என கைப்பற்றியது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளான நேற்று 427 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை இளையோர் அணி 76.5 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மத்திய வரிசையில் சஞ்சு விக்குனகொட (64) மற்றும் அணித் தலைவர் விமத் தின்சர (64) ஆகியோர் அரைச் சதம் பெற்றபோதும் மற்ற வீரர்கள் நின்றுபிடித்து ஆடத் தவறினர். குறிப்பாக இலங்கை இளையோர்கள் 155 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே நேற்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் மேலும் 105 ஓட்டங்களைப் பெறுவதற்குள் எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

இந்திய இளையோர் அணி சார்பில் ரொஹித் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சிகுருபத்தி வென்கடா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த இளையோர் டெஸ்டில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி முதல் இன்னிங்ஸில் 411 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 148 ஓட்டங்களையே பெற்றது. இந்திய இளையோர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *