இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மகளிர் அணி இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. நிலக்ஷிகா சில்வா ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் ஆரம்ப வீராங்கனையாக வந்த சமரி 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பாகிஸ்தான் மகளிர் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு குல் பெரோசா (78) மற்றும் சித்ரா அமீன் (57) ஆகியோர் 90 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 43 ஓவர்ளில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 211 ஓட்டங்களை எட்டியது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நாளை (25) நடைபெறவுள்ளது.




