நாற்பது இலங்கை வீர, வீராங்கனைகளின் பங்கேற்புடன் 23 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.
பொதுநலவான அமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். 10 விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்தப் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை இடம்பெறும்.
எனினும் இந்தப் போட்டி இழுபறிக்குப் பின்னரே நடைபெறவுள்ளது. முன்னதாக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா நகரிலேயே போட்டியை நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும் அதிக செலவு காரணமாக அந்த நபர் விலகிக் கொண்டதை அடுத்தே கிளாஸ்கோ போட்டியை நடத்த முன்வந்தது. ஸ்கொட்லாந்தில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நடைபெறுவது இது நான்காவது முறையாகும்.
இந்தப் போட்டியில் இலங்கை பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்புடனேயே களமிறங்குகிறது. இலங்கை குழாத்தில் 27 வீரர்கள் மற்றும் 13 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக வலுவான தடகள அணி ஒன்று இம்முறை போட்டியில் பங்கேற்கவுள்ளது.
இதில் அண்மைக் காலத்தில் ஈட்டி எறிதலில் சோபித்து வரும் ருமேஷ் தரங்க தற்போது சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசையில் இரண்டாவது இடம் வரை முன்னேறியுள்ளது. இம்முறை பொதுநலவாக விளையாட்டுப் போட்டியில் இலங்கை தக்கப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அவரிடம் உள்ளது.
பொதுநலவான விளையாட்டுப் போட்டியில் இலங்கை கடைசியாக 2006 இல் மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியிலேயே தங்கப் பதக்கம் ஒன்றை வென்றது. பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே அந்தப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இம்முறை போட்டியில் மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்கவும் பங்கேற்றிருப்பதோடு மகளிர் பிரிவில் ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேகம்கே இடம்பெற்றுள்ளார். அதேபோன்று இலங்கை ஓட்ட வீரர்களான காலிங்க குமாரகே மற்றும் அருண தர்ஷய ஆகியோர் பங்கேற்றிருப்பதோடு இவர்கள் 400 மீற்றர் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கம் வென்றிகொடுக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை மெய்வல்லுநர் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் அருந்தவராசா புவிதரனும், இலங்கை நீச்சல் அணியில் கொழும்பைச் சேர்ந்த எம்.எச் முஹம்மட்டும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான புவிதரன், இலங்கை மெய்வல்லுநர் நிறுவனத்தினால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இறுதி திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.20 மீற்றர் உயரத்தைத் தாவி, புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.
அதேபோன்று, கடந்த மாதம் தென் கொரியாவின் பூசானில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியொன்றிலும் அவர் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தார்.
தடகளப் போட்டிகள் தவிர இம்முறை பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை குத்துச்சண்டை, பளுதூக்கல், ஜூடோ, நீச்சல் மற்றும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் பங்கேற்கிறது. தவிர, இலங்கையின் இரு பரா வீரர்களும் இம்முறை போட்டியில் பங்கேற்கின்றனர்.
இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் மருதானை சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த எம்.எச் முஹம்மட் பங்குபற்றவுள்ளார்.
18 வயதான இளம் நீச்சல் வீரரான முஹம்மட் அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இதில் கொழும்பு சுகததாச நீச்சல் தடாக வளாகத்தில் கடந்த மே மாதம்; நடைபெற்ற ஆசிய வயதுப் பிரிவு சம்பியன்ஷிப் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டிகளில், ஆண்களுக்கான 50 மீற்றர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீற்றர் பிரஸ்ட்ஸ்ட்ரோக் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இரண்டு தேசிய சாதனைகளை அவர் தகர்த்தார்.




