ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டொலர்களை செலவிட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் பிட் ஹெகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 11 ஆவது நாளாக நேற்றும் (22) தாக்குதல்களை நடத்தி, ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா இன்னும் முடிக்கவில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி இருக்கும் நிலையிலேயே ஹெகத் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான கடுமையான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்த பின்னர் ஹெகத் நேற்று முன்தினம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் கேள்விகளை எதிர்கொண்டார். வொஷிங்டனில் இடம்பெற்ற இந்த விசாரணையின்போது, இந்த 37.5 பில்லியன் டொலர் செலவில் போரின் சில அம்சங்கள் மற்றும் செப்டெம்பர் 30 வரை எதிர்பார்க்கப்படும் செலவுகளும் அடங்குவதாக ஹெகத் கூறினார்.
கடந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கூடுதலாக சுமார் 90 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்குமாறு கொங்கிரஸிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதில் பெரும்பாலான நிதி ஈரான் தொடர்பான போருக்காக ஒதுக்கப்படவுள்ளது.
ஈரான் போர் அமெரிக்க அரசியலில் பெரும் நெருங்கடியை உருவாக்கி உள்ளது. குறிப்பாக அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கடினமான போட்டியை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சியினர் மக்களிடம் பிரபலமற்றதாக உள்ள ஈரான் போரை, வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார சுமைகளுடன் தொடர்புபடுத்தி அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அமெரிக்கா நேற்றும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதோடு, ‘ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை தொடர்ந்து குறைக்கும் நோக்கத்துடன் இந்த தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக’ அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டது.
தலைநகர் டெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் குறிப்பிட்டது. டப்ரிஸ், சபஹார், கொனரக் மற்றும் ஈரானின் ஒரே அணு மின்சார உற்பத்தி நிலையம் இருக்கும் பஷெர் பகுதிகளில் வெடிப்புகள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பிராந்திய நாடுகள் மீது ஈரான் மீண்டும் பதில் தாக்குதல்களை நடத்தியது. மேற்கு குவைட்டில் கேம்ப் டோஹாவில் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டது.
அமெரிக்காவின் ‘தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு’ பதிலளிக்கும் வகையில், அந்தத் தளத்தில் உள்ள ‘வெடிபொருள் களஞ்சியங்கள்’ மற்றும் ‘தரைப்படை கட்டளைப் பிரிவின் தளபாட உபகரணங்கள்’ மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரலில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டதோடு, கடந்த மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்தானது. என்றபோதும் சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு தீர்க்கமாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே கடந்த வாரம் தொடக்கம் மோதல் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் முடக்கி இருக்கும் நிலையில் அதன் ஊடான கப்பல் போக்குவரத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுமே இருந்ததோடு இது அதற்கு முந்தைய தினத்தில் பதிவான நான்கு கப்பல்களைவிட குறைவாகும் என கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கிப்லரின் தரவுகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நீரிணை வழியாக எந்தவொரு மிகப்பெரிய மசகு எண்ணெய் கப்பல் அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் கடந்து சென்றதாக வெளிப்படையாகப் பதிவாகவில்லை என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு நேற்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு டொலரால் அல்லது 1.1 வீதத்தால் அதிகரித்ததோடு இதனால் பீப்பாய் ஒன்று 92.01 டொலரை தொட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஈரான் மீதான தாக்குதல்களை இன்னும் முடிக்கவில்லை என்று எச்சரித்திருக்கும் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு வசதிகளை இலக்கு வைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘நாங்கள் இப்போது உடனடியாக வெளியேறினால், ஈரானை மீண்டும் கட்டியெழுப்ப 20 அல்லது 25 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை… நாங்கள் இப்போது வெளியேறப் போவதில்லை,’ என்று அவர் எச்சரித்திருந்தார்.
அடுத்த தாக்குதல் ஈரான் இரகசியமாக அணு செறிவூட்டல் தளத்தை உருவாக்கி வருவதாக நம்பப்படும் சிக்கலா பிக்காக்ஸ் மலைகளாக இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ‘நாம் அந்தப் பகுதியை விரைவில் தாக்குவோம், மேலும் அது மிகவும் தீவிரமான தாக்குதலாக இருக்கும்,’ என்று வெள்ளை மாளிகையில் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் உடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் உரையாற்றிய டிரம்ப் கூறினார்.
இந்த மோதல் முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் மத்தியஸ்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான், கட்டார், எகிப்து மற்றும் பிராந்திய நாடுகள் இரு தரப்புக்கும் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக மத்தியஸ்தர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதை உறுதிப்படுத்தி இருந்தார்.
மறுபுறம், ஈரான் நெருக்கடிக்கு முடிவு காண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இன்னும் தயாராக இருப்பதாகவும் ஆனால், ஈரான் பேச்சுவார்த்தைகளில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.




