ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் அரையிறுதிப் போட்டிகளை நடத்துவது தொடர்பிலும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) பரிசீலித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் வருடாந்தக் கூட்டம் ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே உலகக் கிண்ண கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் ஆடும் அணிகளின் எண்ணிக்கையை 14 இல் இருந்து 12 ஆக குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்து 2027 இல் தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வேயில் நடைபெறும் போட்டியிலேயே கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உலகளாவிய தகுதிகாண் போட்டிகள் மூலம் நான்கு அணிகளுக்கு பதில் இரண்டு அணிகளுக்கே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற வாய்ப்பு ஏற்படும்.
இதன்போது டி20 உலகக் கிண்ண போட்டியும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் போட்டியின் சுப்பர் எட்டு சுற்றுக்கு பதில் அதனை ‘சுப்பர் 10’ ஆக மாற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் தற்போது 9 அணிகள் ஆடும் நிலையில் அதனை 12 ஆக மாற்றும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
எனினும் இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.சி.சி. தொடர்ந்து முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் மேலதிகமாக அரையிறுதிப் போட்டிகளையும் இணைக்கும் சாத்தியம் குறித்து ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டி அட்டவணையில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் ஐ.சி.சி. ஆலோசித்துள்ளது. குறிப்பாக அதிக சந்தைப்படுத்தல் வாய்ப்பு உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை அதிகரிப்பதில் ஐ.சி.சி. அதிக ஆர்வத்தை வெளியிட்டுள்ளது. இந்த இரு அணிகளும் தற்போது பிரதான தொடர்கள் தவிர இரு தரப்பு போட்டிகளில் ஆடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, பிராந்தியங்களுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் மற்றும் கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ண போட்டிகளை நடத்துவது குறித்தும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.




