ஸாஹிரா கல்லூரி 60கள் குழு பழைய மாணவர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், சாஹிரா அழைப்பு எழுவர் ரக்பி தொடர் எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி கொழும்பு றோயல் விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை பாடசாலை ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் ஒப்புதலுடனும் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கையின் 12 முன்னணி ரக்பி பாடசாலை அணிகள் பங்கேற்கவுள்ளன. இதன்படி கொழும்பு சாஹிரா கல்லூரியுடன் இசிபத்தான, தேர்ஸ்டன், டி.எஸ். சேனநாயக்க, ஆனந்த, சயன்ஸ், லும்பினி, மகாநாம, தர்மராஜா, வித்யார்த்த, சுமங்கல மற்றும் நாலந்தா கல்லூரிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டி தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கல்லூரியின் பெருமை மிகு ரக்பி பாரம்பரியத்தையும், இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் கல்லூரி அதிபர் ரிஸ்வி மரைக்கார் வலியுறுத்தினார்.
இத்தொடரின் பிரதான அனுசரணையாளராக மூஸ் கிளோதிங் நிறுவனமும் இணை அனுசரணையாளராக டயமன்ட் மில்க் நிறுவனமும் செயற்படவுள்ளது.




