ஜனாதிபதி அநுர மீதான மக்கள் நம்பிக்கை 75.5%

4 Min Read

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75.5% எனவும்,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது 29.4% மக்கள் நம்பிக்கை உள்ளது எனவும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான சமூகக் குறிகாட்டி இணைந்து நடத்திய அண்மைக்கால “ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை பற்றிய சுட்டெண்” எனும் மக்கள் கருத்துக்கணிப்பின் முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தனிப்பட்ட நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும், திருப்தியும் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 23 முதல் ஜூன் 18, 2026 வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1,240 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, ஜனாதிபதியின் செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சியின் பலவீனம் குறித்துப் பின்வரும் முக்கிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன:

தலைப்பு                                         ஜனாதிபதி அநுர குமார                                         எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மக்களின் திருப்தி வீதம்                 75.5%                                                                                                                29.4%
மக்களின் அதிருப்தி வீதம்            23.3%                                                                                                                 64.9%

ஜனாதிபதிக்கு 18–29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடமிருந்து 81.6% என்ற மிக உயர்ந்த பொது அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், கிராமப்புற மக்களில் 76.4% பேர் அவரது செயல்பாடுகளில் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் மீதான திருப்தி மலையகத் தமிழ் மக்களிடையே 94.4% ஆகவும், முஸ்லிம் மக்களிடையே 93.4% ஆகவும் மிக உச்சத்தில் பதிவாகியுள்ளது.

சிங்கள மக்களிடையே 69.9% பேர் திருப்தி வெளியிட்டுள்ள போதிலும், ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் இதுவே குறைவான சதவீதமாகும்.

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டை திறம்பட ஆட்சி செய்யும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை 62.8% ஆகக் காணப்படுகிறது.

‘டிட்வா’ சூறாவளி நிவாரணம்:
அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட நிவாரணம், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு 68.6% மக்கள் பலத்த ஆதரவை வழங்கியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணை:
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து 51.6% பேர் திருப்தியடைந்துள்ளதுடன், 32.4% பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்தில் 73.3% பேரும், மலையகத் தமிழ் சமூகத்தில் 72.2% பேரும், சிங்கள சமூகத்தில் 46.4% பேரும் இதில் திருப்தி கண்டுள்ளனர். அத்துடன் 30 வயதுக்கு மேற்பட்டோரை (48%) விட 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் (58.5%) இந்த விசாரணைகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மாகாண சபை தேர்தல்:
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது முக்கியம் என 67.0% மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை:

நாட்டின் பிரதான அரசியல் சீர்திருத்தம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 64.1% மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், அவர்களில் 40.5% பேர் இது அரசாங்கத்தின் தற்போதைய அவசர முன்னுரிமை  அல்ல என்றும், 23.6% பேர் மட்டுமே இதனை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

அரசாங்கத்திற்கு இருக்கும் பிரதான சவால்:
வாழ்க்கைச் செலவுஇந்தக் கருத்துக்கணிப்பு தற்போதைய நிர்வாகத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி:
நாட்டின் 51.4% பொதுமக்கள் தங்களது குடும்பப் பொருளாதார நிலை முந்தைய ஆண்டை விட மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் மேலாண்மை குறித்து 45.3% பேர் திருப்தியடைந்தாலும், 44% பேர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் (சிங்கள சமூகத்தில் அதிருப்தி 48.4% ஆக உள்ளது). அத்துடன் கிராமப்புறங்களை விட நகர்ப்புற மக்களே அதிக பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக, தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் சீர்திருத்தங்கள், நிவாரணப் பணிகள் மற்றும் நிர்வாகத் திறனைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினாலும், இந்த அரசாங்கத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மையானது, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதிலும் மக்களுக்குப் நடைமுறை ரீதியான பொருளாதார நிவாரணங்களை வழங்குவதிலுமே தங்கியுள்ளது என்பதை இந்த சிபிஏ (CPA) கருத்துக்கணிப்பு தெளிவாகக் காட்டுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *