சர்வதேச கால்பந்து சம்மேளனம் முதல் முறையாக ஏற்பாடு செய்யும் 15 வயதுக்கு உட்பட பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 22 தொடக்கம் 31 ஆம் திகதி வரை அசர்பைஜானில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இலங்கை கால்பந்து அணியும் தகுதி பெற்றுள்ள நிலையில் உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஒன்றில் இலங்கை முதல் முறையாக ஆடவுள்ளது.
இளம் வீரர்களின் திறமையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொடருக்கு உலகின் 200 பிஃபா உறுப்பு நாடுகள் பங்கேற்கவிருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டுள்ளார். 2011 மற்றும் 2012 இல் பிறந்த இலங்கை வீரர்கள் 14 பேர் இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பங்கேற்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
‘இலங்கை 15 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் 8000 பேருக்கு மேல் உள்ளனர். அதில் 14 பேரை தேர்வு செய்வது இலகுவானதல்ல. மிகவும் நியாயமான முறை ஒன்றை அமைத்து நாடு முழுவதும் 55 கால்பந்து லீக்குகளை ஒரு மாதம் பயிற்சி அளித்து தேர்வு போட்டிகள் நடத்தி வீரர்களை தேர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நடத்துவதற்கு பிஃபா எடுத்த முடிவு சிறப்பானதாகும். கால்பந்து ஆடாத நாடுகள் தற்போது இந்த விளையாட்டுக்கு ஆர்வம் காட்டுகின்றன’ என்று உமர் தெரிவித்தார்.
இந்த 15 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் 8 பேர் கொண்ட அணியே ஆடவிருப்பதோடு, சிறிய மைதானங்களில் போட்டிகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்த போட்டிக்காக தனியான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் பிஃபா திட்டமிட்டுள்ளது. ஆரம்பச் சுற்றில் 6 அல்லது 7 அணிகள் கொண்ட 32 குழுக்களின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து கால்பந்து வீரர்களையும் ‘ஒன்லைன்’ தொழில்நுட்பம் ஊடாக பதிவு செய்வதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் ‘புட்போல் பாஸ்போட்’ என்ற புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வீரர்களையும் ஒரே கட்டமைப்பு ஊடாக பதிவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு இந்த புதிய முறை ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




