இஸ்லாம் போதிக்கும் ஒழுக்க மாண்புகள்

5 Min Read

இஸ்லாம் ஏக இறைவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மார்க்கமாகும். இந்த மார்க்கம் மனித சமூகத்திற்குத் தேவையான நல் உபதேசங்களை வழங்கி உள்ளது. ஒரு மனிதனுக்கு முக்கியமான, தேவையான, அவசியமான அன்றாட வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க மாண்புகளை இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகளை ஒரு மனிதர் உலக வாழ்வில் கடைப்பிடிப்பாரானால் அவர் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுஉலக வாழ்க்கையிலும் வெற்றி பெறுவர்.ஒரு மனிதரிடத்தில் ஒழுக்க மாண்புகள் இல்லையென்றால் அவர் இவ்வுலகிலும் மறுமையிலும் நஷ்டமடைந்தவராக இருப்பார். அதுவே இஸ்லாமிய போதனை. மனிதனுடைய வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கப்படக் கூடியதாகும்.

ஒழுக்கம் மனிதர்களிடத்தில் இல்லை என்றால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போயிருக்கும். மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத சிறப்பம்சம் மனிதனுக்கு உண்டு என்றால் அது ஒழுக்க நெறியோடு வாழும் வாழ்க்கைதான்.

ஒரு குழந்தையின் முதல் முன்மாதிரி அவனுடைய தாய், தந்தை ஆவர். பெற்றோர்களிடத்தில் ஒழுக்க மாண்புகள் இருக்கும் என்றால் பிள்ளைகளிடத்திலும் அது பிரதிபலிக்கும்.

ஒரு தந்தையிடத்தில் புகைப் பழக்கம், மதுப்பழக்கம் இருக்குமேயானால் அவரால் எப்படி பிள்ளைகளுக்கு மது, புகை போன்ற பழக்கம் குறித்து அறிவுரை கூற முடியும்? அது போன்று அவர்களிடம் பெருமை, ஆணவம், பொய், புறம், அவதூறு போன்ற தீய குணங்கள் இருக்குமேயானால் அவர்களால் தங்கள் பிள்ளைகளை எப்படி நேர்வழிப்படுத்த முடியும்? எனவேதான் இஸ்லாம் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பை அளப்பரியதாக கருதுகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கமான தீனுல் இஸ்லாத்தில்தான் பிறக்கின்றன. அக்குழந்தையை நெருப்பு வணங்கிகளாக(இணை வைப்பவராக) அவர்களது பெற்றோர்கள்தான் மாற்றி விடுகின்றனர்’. (நபிமொழி)

ஒரு மனிதன் தன் பார்வை விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இஸ்லாம் போதிக்கின்றது. ஏனெனில் பார்க்கக்கூடாத காட்சிகளைக் கண்கள் பார்க்கும்போது தவறான எண்ணம் தோன்றுகிறது. மிக இலகுவாக மனிதன் ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்வதற்கு முதல் படியாக பார்வை உள்ளது. அதனால்தான் அல் குர்ஆன் பார்வை தொடர்பாக அறிவுரை கூறுகிறது.

‘(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்.

(அல் குர்ஆன் 24:30, 31)

மேலும் இஸ்லாம் ஆடை விஷயத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான், ‘தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும்.’

(அல் குர்ஆன் 24:31)

அதேநேரம் நபி(ஸல்) அவர்கள் இறுக்கமாக ஆடையணிவது கூடாது என்றார்கள். ‘கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது வெட்கத்தலங்கள் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நட்டு வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’. (ஆதாரம்: புஹாரி)

மேலும் நாம் எப்படிப்பட்ட நண்பனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ கரித்து விடும் அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்’. (ஆதாரம்: புஹாரி)

அதனால் மாணவர்கள் ஒழுக்க மாண்புகள் உடையவரை தன்னுடைய நண்பனாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்களானால் அவனிடத்தில் இருக்கும் நல்ல பண்புகள் அவனது நண்பனிடத்திலும் காணப்படும். மாறாக தீய பண்புகளைக் கொண்ட மாணவனை ஒருவன் நண்பனாகத் தேர்ந்தெடுத்தால் அவனிடத்திலுள்ள தீயகுணங்கள், தீய செயல்கள் இவனிடத்திலும் பிரதிபலிக்கும். மேற்சொன்ன நபிமொழி நாம் ஒழுக்க மாண்புகளை மேற்கொள்ள சிறந்த அறிவுரையாக உள்ளது.

பேச்சு ஒழுங்குகள்

ஒருவனை நல்லவன் என்று அடையாளப் படுத்துவதற்கு அவனது பேச்சு ஒழுங்குகளும் ஒரு காரணியாக அமைகின்றது. அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான், ‘நம்பிக்கை கொண்டோரே… அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்’.

(அல் குர்ஆன் 33:70)

‘(நபியே! நம்பிக்கையாளர்களான) என் அடியார்களிடம், அவர்கள் மிகவும் சிறந்த பேச்சைத்தான் பேச வேண்டும் என்று நீர் கூறுவீராக!’

(அல் குர்ஆன் 17:53)

குரலைத் தாழ்த்திப் பேச வேண்டும்

‘உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்’.

(அல் குர்ஆன் 31:19)

நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்

‘நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி) கெட்டவார்த்தை பேசக் கூடாது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நான் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்ததில்லை.

உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (ஆதாரம்: புஹாரி)

ஆதாரமில்லாமல் பேசக் கூடாது

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். இவ்வாறு சொல்லப்பட்டது. அவர் சொன்னார், இவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது)’

(ஆதாரம்: புஹாரி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘தான் கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்’.

(ஆதாரம்; முஸ்லிம்)

சிரிப்பிலும் ஒழுக்கம்

சிரிப்பு இறைவனின் அருட்கொடையாகும். அல்லாஹ் கூறுகின்றான். ‘சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே! மேலும் அவனே மரணமளிக்கின்றான். அவனே வாழ்வளிக்கின்றான்’.

(அல் குர்ஆன் 53:43,44)

சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்லக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எவன் பிற கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடுதான்!

(ஆதாரம்: திர்மிதி)

மற்றொரு சமயம் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ‘அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனென்றால் அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும்’என்றார்கள்.

(ஆதாரம்: இப்னுமாஜா)

இஸ்லாம் மனித சமூகத்தைச் சீர்திருத்தம் செய்வதற்காகவும், மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்காகவும், ஒழுக்கம், நற்பண்புகள், நற்சிந்தனைகள் கொண்டவனாக உருவாக்கும் வழிமுறைகளைத் தெளிவுபடக் கூறுகிறது. மனிதனின் பேச்சில், அவனது சிரிப்பில், அவனது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க மாண்புகளைத் அல் குர்ஆன் மூலமாகவும் நபிகளாரின் வாழ்வு மூலமாகவும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகளை ஒரு மனிதன் பின்பற்றி வாழ்வான் எனில் இவ்வுலக வாழ்க்கையிலும் அவனது இறப்புக்குப் பின் மறுமை வாழ்விலும் வெற்றி பெறுவான் என்று அல்லாஹ் மனித சமூகத்திற்கு நற்செய்தி கூறியுள்ளான் என்றால் அது மிகையாகாது.

அப்துல்லாஹ்…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *