76 ஓட்டங்களுக்கே சுருண்ட இந்தியா டி20 வரலாற்றில் மோசமான தோல்வி

1 Min Read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 76 ஓட்டங்களுக்கே சுருண்ட இந்திய அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததன் மூலம் டி20 சர்வதேச போட்டியில் தனது மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

நொட்டிங்ஹாமில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் 202 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் பதிலெடுத்தாட வந்த இந்திய அணி இடைவிடாது விக்கெட்டுகளை பறிகொடுத்தே 11.4 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் பெற்ற தலா 13 ஓட்டங்களுமே அதிகமாகும்.

இந்தத் தோல்வியின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2–0 என பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெறத் தவறியுள்ளது.

அத்துடன் இந்திய அணி டி20 போட்டியில் 100இற்கும் அதிகமான ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை சந்திப்பதும் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர் 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக 80 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததே மோசமாக இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை பிரிஸ்டலில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தொடர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் இந்திய அணி தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு அடுத்த இரு போட்டிகளில் வெல்வது கட்டாயமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *