திமன்தவின் அபார துடுப்பாட்டத்தால் இலங்கை இளையோர் அணி வெற்றி

1 Min Read

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1–1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (06) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றது. அன்வாய் டிராவிட் (87) மற்றும் அர்ஜீன் ராஜ்புட் (76) 5 ஆவது விக்கெட்டுக்கு  145 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கம்ஹான் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்ப வீரர் திமன்த மஹவிதாரண அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். 153 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களைப் பெற்றார். சனுஜ விகுனகொட (60) மற்றும் அணித் தலைவர் விமத் தின்சர (ஆட்டமிழக்காது 56) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

இதன்மூலம் இலங்கை இளையோர் அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 291 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (09) நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *