மறைந்த ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமெனேயின் இறுதிச் சடங்கு ஊர்வலம் தலைநர் டெஹ்ரானில் நேற்று (06) ஆரம்பித்ததோடு இதில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். முந்தைய உயர்மட்டத் தலைவரின் இறுதிச் சடங்கில் இடம்பெற்ற குழப்பநிலை போன்ற சூழலை தவிர்க்கும் வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஏற்பாட்டாளர்கள் தீவிர அவதானம் செலுத்தி வருகின்றனர்.
டெஹ்ரானின் கிரான்ட் மொசல்லா மத வளாகத்தில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்த கமெனேயின் உடல் நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் நகரில் 12 மணி நேரம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க பெரும் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது.
1989 இல் முன்னாள் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா ரூஹுல்லா கொமைனியின் இறுதிச் சடங்கில் சுமார் 10 மில்லியன் மக்கள் பங்கேற்றதோடு அதிக கூட்டம் நிரம்பியதால் 10 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு 10,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வாறான குழப்ப நிலையை தவிர்ப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் முயன்று வருகின்றனர்.
கிரான்ட் மொசல்லாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்த முதல் தினத்திலேயே உயர்மட்டத் தலைவர் மற்றும் அவரது நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் உயர்மட்ட தலைவரின் உடல் அடங்கிய சவப்பெட்டி மற்றும் பொதுமக்களை பிரிக்கும் வகையில் பாரிய கொங்கிறீற் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு எந்தளவுக்கு சவப்பெட்டிக்கு அருகாமைக்குச் செல்ல முடியும் என்பது தெளிவாக இல்லை. ஆனால், 1989 இறுதி ஊர்வலத்தின்போது மக்கள் முன்னால் உயர்மட்ட தலைவரின் உடலை ஏற்றிய வாகனத்தை சூழ்ந்ததால், அவரது அடக்க துணி கிழிந்ததுடன் அவரது உடல் தரையில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரை அடக்கம் செய்ய ஹெலிகொப்டர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதை அதிகாரிகள் நினைவில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர்.
அத்துடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஐந்து வார போருக்கு பின்னர் இடம்பெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வை ஈரான் நிர்வாகம் எதிர்ப்பு போராட்டத்தை வெளிப்படுத்தும் ஓர் அம்சமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் பாராளுமன்ற சபாநாயகரும் அமெரிக்காவுடனான தலைமை பேச்சுவார்த்தையாளருமான முஹமது பகர் கலிபப், ‘இஸ்லாமிய ஈரானின் பெருமைமிக்க மற்றும் தோற்கடிக்க முடியாத மக்கள் ஒருமனதாக தங்களின் ‘தியாகி’க்கு அஞ்சலி செலுத்தினர்’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைநகரில் நேற்று இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து இதேபோன்று ஒரு நிகழ்வு அந்நாட்டின் சமய மையமாக இருக்கும் கோமில் இன்று இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈராக்கின் புனித நகரங்களான நஜாப் மற்றும் கர்பலாவுக்கு நாளை (08) எடுத்துச் செல்லப்படவுள்ளது. தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை கமெனேயின் சொந்த ஊரான வடகிழக்கு ஈரானின் மஷ்ஹத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதிச் சடங்கில் அலி கமெனேயின் மூன்று மகன்மார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக அரிதாக பொதுவெளியில் தோன்றினர். எனினும் புதிய உயர்மட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மற்றொரு மகனான மொஜ்தபா கமெனேய் இன்னும் பொது வெளியில் தோன்றவில்லை.
கமெனேய் படுகொலை செய்யப்பட்ட தாக்குதலின்போது மொஜ்தபாவும் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியபோதும் அவரது காயத்தின் தீவிரம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
பெப்ரவரி 28 தாக்குதலில் கொல்லப்பட்ட வலுவான புரட்சிக் காவல் படையின் தளபதிக்கு பதில் நியமிக்கப்பட்ட புதிய தளபதியான அஹமது வாஹிதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டார். போர் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இருந்த அவர், இந்த முறை திறந்த வெளியில் தோன்றினார்.
மேலும், புரட்சிக் காவல் படையின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இஸ்மைல் கானி தலைமையிலான குத்ஸ் படையின் தலைவர் அரிதாகவே பொதுமக்கள் முன் தோன்றும் நிலையில், அவரும் நிகழ்வில் தோன்றினார்.
ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருப்பதோடு பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளது.
உயர்மட்ட தலைவரின் இறுதிச் சடங்கையொட்டி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஜானதிபதி டொனால் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தெற்கு லெபனான் மற்றும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தெற்கு லெபனானின் நபட்டியே நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் லெபனானுடன் இஸ்ரேல் கடந்த மாதம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்ட நிலையிலேயே அங்கு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மறுபுறம் தெற்கு காசாவின் அல் மவாசியில் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 16 பேர் காயமடைந்ததாக நாசர் மற்றும் அல் ஹிலால் வைத்தியசாலைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.




