நேட்டோ அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று துருக்கியின் அங்காராவில் ஆரம்பமாகின்றது. 22 வருடங்களின் பின் துருக்கியில் நடைபெறும் இம்மாநாட்டில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவர்களும் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இன்று மாலை நேட்டோ தலைவர்களுடன் இரவு விருந்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா தனது பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும், ஈரான் போர் மற்றும் கிறீன்லாந்து விவகாரங்கள் பல மாதங்களாக நிலவி வரும் சூழலிலும் இம்மாநாடு இன்று ஆரம்பமாகிறது.
அதேநேரம் நேட்டோ மீதான அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான விமர்சனங்கள், ஐரோப்பாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெறப் போவதாக அறித்துள்ளமை, அமெரிக்க இராணுவத்தின் இருப்பு குறித்து ஆறு மாத காலத்தில் மீளாய்வு ஆகிய அறிவிப்புக்கள் நேட்டோ கூட்டணிக்குள் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளமையும் தெரிந்ததே.




