இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு முதல்முறை ஏற்பாடு செய்யும் கொழும்பு மரதன் போட்டிக்கான வீரர்கள் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி முழு அளவிலான மரதன் போட்டி உட்பட சிறுவர்களுக்கான மினி மரதன் வரை பல பிரிவுகளில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா விளையாட்டு துறையை மையப்படுத்தியே விளையாட்டுத் துறை அமைச்சு கொழும்பு மரதன் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான தொழில்நுட்ப பணிகளை மெய்வல்லுனர் சங்கத்தின் தகுதி பெற்ற 100 நடுவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போட்டிக்காக www.colombomarathon.lk என்ற இணையதளத்தின் மூலம் அல்லது வழங்கப்பட்டிருக்கும் QR குறியீட்டின் மூலம் பதிவை மேற்கொள்ள முடியும் என்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
இதில் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவிருப்பதோடு 41.195 கிலோமீற்றர் கொண்ட முழு அளவிலான மரதன் போட்டி மற்றும் 21.097 கிலோமீற்றர் கொண்ட அரை மரதன் போட்டிகள் பிரதானமாக இடம்பெறவுள்ளன. தவிர 10 கி.மீ. ஓட்டப் போட்டி, 5 கி.மீ. வேடிக்கை ஓட்டம், சிறுவர்களுக்கான 1–2 கி.மீ. மினி மரதன் போட்டியும் நடைபெறவுள்ளன.




