லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா கைதாகி பிணையில் விடுதலை

1 Min Read

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்துள்ள நீதவான் அசங்க எஸ். போதரகம மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதற்கிணங்க சந்தேக நபரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் விடுவிக்குமாறும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட 3 அதிகாரிகளை, அந்த நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணிபுரிவதற்காக நியமித்துள்ளார். அந்த வகையில் இந்த நியமனத்தின் மூலம் இடம்பெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *