இலங்கை மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது நான்கு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி நாளான நேற்று 313 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை ஏ அணி ஆட்டநேரம் முடிவின்போது 2 விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களை பெற்றது. ஆட்டத்தின் பகல்போசண இடைவேளைக்கும் பின்னரே இலங்கை ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்ததோடு 15 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.
இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 111.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 452 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் சாய் சுதர்ஷனுடன் (132) மத்திய வரிசையில் அணித் தலைவர் துருல் ஜுரல் (141) சதம் பெற்றனர்.
இந்நிலையில் இலங்கை ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 84 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனால் முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்களால் முன்னிலை பெற்றே இந்திய ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இதன்போது இலங்கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டதோடு இடது கை சுழல் வீரர் திலும் சதீர 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதனால் இந்திய அணியால் இரண்டாவது இன்னிங்ஸுக்கு 57 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களையே பெற முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி நான்கு நாள் போட்டி எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இதே காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.




