கடைசி நிமிட கோல்கள் மூலம் ஹெய்டி அணியை 4–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணி தனது கடைசி குழுநிலை போட்டியில் ஸ்கொட்லாந்தை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அட்லாண்டாவில் இலங்கை நேரப்படி நேற்று (25) அதிகாலை 3.30 இற்கு நடைபெற்ற சி குழுவுக்கான போட்டியில் கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறி மொரோக்கோ 10 ஆவது நிமிடத்திலேயே எதிரணிக்கு ஓன் கோல் கொடுத்தது. இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் 2–2 என சமநிலை பெற இரண்டாவது பாதியின் 78 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் கோல் புகுத்தியே மொரோக்கோ போட்டியில் வெற்றியீட்டியது.
எனினும் கோல் வித்தியாசத்தில் சி குழுவில் மொரோக்கோ அணியால் பிரேசிலை பின்தள்ள முடியாமல் போனது. இதனால் அந்தக் குழுவில் இரண்டாம் இடம் பிடித்த மொரோக்கோ எதிர்வரும் திங்களன்று 32 அணிகள் சுற்றில் ஆடவுள்ளது.
மியாமியில் நேற்று ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட பிரேசில் சார்பில் வின்சியஸ் ஜூனியர் இரட்டை கோல் பெற்றதோடு, மத்தியுஸ் குன்ஹா மற்றொரு கோலை போட்டார்.
இதேவேளை ஏ குழுவுக்காக மொன்டாரேவில் நேற்று நடந்த போட்டியில் தென் கொரியாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த தென்னாபிரிக்கா முதல் முறையாக உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 63 ஆவது நிமிடத்தில் தபெலோ மசகோ பெற்ற கோல் அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது.
மறுபுறம் ஏ குழுவில் நடந்த மற்றொரு போட்டியில் போட்டியை நடத்தும் மெக்சிகோ செக் குடியரசை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தோல்வியுறாத அணியாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பி குழுவில் கட்டாருக்கு எதிரான போட்டியில் 3–1 என வெற்றியீட்டிய பொஸ்னியா ஹெர்சகோவினியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எதிர்பார்ப்பை தக்கவைத்திருப்பதோடு அதே குழுவில் போட்டியை நடத்தும் கனடாவை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளைய போட்டிகள்
மு.ப. 12.30 – நோர்வே எதிர் பிரான்ஸ் (குழு ஐ), பொஸ்டன்
மு.ப. 12.30 – செனகல் எதிர் ஈராக் (குழு ஐ), டொரொன்டோ
மு.ப. 5.30 – கேப் வெர்டே எதிர் சவூதி அரேபியா (குழு எச்), ஹூஸ்டன்
மு.ப. 5.30 – உருகுவாய் எதிர் ஸ்பெயின் (குழு எச்), குவாடலஜாரா
மு.ப. 8.30 – எகிப்து எதிர் ஈரான் (குழு ஜி), சியாட்டில்
மு.ப. 8.30 – நியூசிலாந்து எதிர் பெல்ஜியம் (குழு ஜி), வான்கூவர்




