மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தீர்க்கமான குழுநிலை ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியுற்றதற்கு அணித் தலைவி சமரி அத்தபத்து முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி சந்தித்த தோல்வியை அடுத்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது. இலங்கை அணி ஏஞ்சிய இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றியீட்டி ஏனைய போட்டிகள் தமக்கு சாதகமாக அமைந்தாலேயே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய அத்தபத்து, ‘உண்மையில் இது வார்த்தைகளால் விபரிக்க முடியாத கவலையை தருகிறது. நான் தேசிய அணிக்காக 18 ஆண்டுகளாக ஆடுகிறேன். எனது அணியை உலகக் கிண்ண அரையிறுதிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.
தனிப்பட்ட சாதனைகள் பலதை நான் எட்டினாலும், அணித் தலைவியாக நான் தோல்வி அடைந்து விட்டேன். அது வீராங்கனை ஒருவருக்கு மிகப்பெரிய வேதனை தருவதாக உள்ளது.
அதனால், அதற்கு நான் வருந்துகிறேன். குறிப்பாக, நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. ஒரு வீராங்கனையாகவும், அணியின் தலைவியாகவும், அதிக அனுபவம் கொண்ட ஒரு வீராங்கனையாகவும் எனக்கு அதிக பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.
36 வயதாகும் சமரி அத்தபத்து 2009 இல் மகளிர் டி20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் அதில் ஆடி வருகிறார். எனினும் இலங்கை அணி இதுவரை உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




