மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்றுமுன்தினம் கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கல்லடி – டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த 17 ஆம் திகதி பங்குத்தந்தை இயேசு சபைத் துறவி அருட்பணி யூட் டிலக்சன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானதைத் தொடர்ந்து செபமாலையும், அதனைத் தொடர்ந்து முதலாவது நவநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
முதலாவது நவநாள் திருப்பலியானது அருட்தந்தை எஸ்.றொஷான் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதேவேளை, நவநாட் காலங்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றன. கடந்த (20) திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனிதரின் திருச்சுருப பவணியும், நற்கருணை ஆராதனையும் ஆசீரும் நடைபெற்றன.
பெருவிழா கூட்டுத் திருப்பலி நேற்று முன்தினம் (21) திகதி காலை 6.30 மணிக்கு திரு இருதயநாதன் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சீ.வீ.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் மேலும் பல அருட்பணியாளர்கள் இணைந்து பெருவிழா கூட்டுத் திருப்பலியினை ஒப்புக்கொடுத்திருந்தனர்.




