பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 108 ஓட்டங்களுக்கே சுருண்டு தோல்வி

1 Min Read

மேற்கிந்திய தீவுகள் தேர்வு பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலகுவான வெற்றி இலக்கை எட்ட முடியாமல் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை அணி 15 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நான்கு நாள் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான நேற்று முன்தினம் (21) இலங்கை அணி 124 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

அன்டிகுவாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி நாளில் இலங்கை அணிக்கு 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெறுமனே 94 ஓட்டங்களையே பெற வேண்டி இருந்தது.

எனினும் இலங்கை விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோக 29.5 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கே சுருண்டது. நிஷான் மதுஷங்க அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றார்.

வேகப்பந்து வீச்சாளர்களான நியால் ஸ்மித் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் தெரிவு அணி 205 ஓட்டங்களைப் பெற்றதோடு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 281 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து மேற்கிந்திய தெரிவு அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 199 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த இலங்கை பந்து வீச்சாளர்களால் முடிந்தது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நோர்த் சௌன்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (25) ஆரம்பமாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *