குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நலன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
உலகின் எந்தெந்த நாடுகளில் சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
அவுஸ்திரேலியா முதல் நாடாக 2025 ஆம் ஆண்டில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை அமுல்படுத்தியது.

பிரேசில் 2வது நாடாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி தேவை என்ற சட்டத்தை கடந்த 17 மார்ச் 2026 அன்று அமுல்படுத்தியுள்ளது. 3வது நாடாக கடந்த மார்ச் 26 ஆம் திகதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இந்தோனேஷியா அமுல்படுத்தியது.
ஆப்ரிக்கா நாடான காபோன் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியது.
கடந்த ஜூன் 1 ஆம் திகதி 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்தியது.

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் சட்டமாக அமுல்படுத்தப்படவில்லை.துருக்கியில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டென்மார்க், ஆஸ்திரியா, ஜேர்மனி, போலந்து, சுலோவீனியா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய பல்வேறு நாடுகளில் பொதுவாக 14-16 வயதினரை இலக்காகக் கொண்டு, இதேபோன்ற சட்டங்களை முன்மொழிவதிலோ அல்லது வரைவு செய்வதிலோ பல்வேறு கட்டங்களில் உள்ளன.
அமெரிக்காவில், புளோரிடா மற்றும் யூட்டா உள்ளிட்ட சில மாநிலங்கள் சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் என்ன நிலை?
இந்தியாவில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC அடிப்படையிலான பயனர் அங்கீகாரம் மற்றும் வயது சரிபார்ப்பு மேற்கொள்ள உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகாவில் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அப்போதைய முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஆந்திராவிலும், 90 நாட்களுக்குள் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
கோவாவிலும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கோவா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் காண்டே தெரிவித்துள்ளார்.



