அவுஸ்திரேலியாவில் செயல்படும் முன்னணி அதிநவீன ‘ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர்’ நிறுவனமான ஏர்டிரங்க் (AirTrunk), இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் ரூ 10,000 கோடி முதலீடு
நாட்டின் டிஜிட்டல் வர்த்தக துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் ஏர்டிரங்க் நிறுவனம் சமீபத்தில் லூமினா கிளவுட்இன்ஃப்ரா (Lumina CloudInfra) நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது.

இந்த லூமினா கிளவுட்இன்ஃப்ரா தளம் மூலமாக, சென்னையில் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இதற்காக, சென்னை ஐடி மற்றும் தொழில் துறையின் மிக முக்கிய மையமாக விளங்கும் அம்பத்தூர் பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த பிரம்மாண்ட நிலப்பரப்பில், சுமார் 216 மெகாவாட் (MW) திறன் கொண்ட பிரம்மாண்ட ‘ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர்’ வளாகம் அமையவுள்ளது.
இந்தியாவில் 5 ஜிகாவாட்
மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் 600 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்கள் இந்நிறுவனத்தின் இந்திய மேம்பாட்டுத் திட்ட வரிசையில் இடம்பெற்றுள்ளன; எனினும், புதிய முதலீட்டின் மூலம் இத்திட்டங்களின் வரம்பு விரிவுபடுத்தப்படலாம்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 5 ஜிகாவாட் அளவிலான புதிய தரவு மையக் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட டேட்டா சென்டர் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் தினசரிச் செயல்பாடுகள் மூலமாக ஆயிரக்கணக்கான புதிய உயர்தர வேலைவாய்ப்புகள் (High-Value Jobs) உருவாகவுள்ளன.



