பகுதி அளவான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அமெரிக்காவின் திட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இணங்கியதாக செய்தி வெளியானபோதும் தெற்கு லெபனானில் மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தைகளை ஈரான் இடைநிறுத்தியதாக செய்தி வெளியான நிலையில் அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘ஈரானிய இஸ்லாமிய குடியரசுடனான விரைவான பேச்சுவார்த்தை ஒன்று தொடர்ந்த இடம்பெற்று வருகிறது’ என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் லெபனானுக்குள் ஆழ ஊடுருவுவதற்கு இஸ்ரேலிய துருப்புகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தையை ஈரான் இடைநிறுத்தியதாக ஈரானின் அரச செய்தி நிறுவனமான டஸ்னிம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை அடுத்து என்.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு தொலைபேசி நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியதாக ஈரான் கூறவில்லை என்றார். ‘அது பற்றி எமக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை’ என்று அவர் கூறினார்.
‘உண்மையைச் சொல்வதென்றால் இரு தரப்பும் அதிகப்படியாக பேசிவிட்டன. அமைதியாக இருப்பதும் நல்லது என்பதோடு அது நீண்ட காலமாக இருக்கலாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்படுவது என்பது அமெரிக்கா ஈரான் மீதான குண்டுவீச்சை ஆரம்பிப்பதாக அர்த்தமில்லை என்றும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த பெப்ரவரி இறுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆரம்பித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே முக்கிய விடயங்களில் தொடர்ந்து பிளவு நீடித்து வருகிறது. அமுலில் இருக்கும் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது.
மறுபுறம் லெபனானில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தி இருப்பது இந்தப் பேச்சுவார்த்தைகளை குழப்புவதாக அமைந்துள்ளது. லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கை அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
லெபனானில் இஸ்ரேல் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பும் அந்த நாட்டின் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டு இருப்பது போர் நிறுத்தத்தை மீறுவதாக உள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்;.
‘ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர்நிறுத்தம், லெபனானையும் உள்ளடக்கிய அனைத்து முனைகளிலும் பொருந்தும் போர்நிறுத்தமாகும். ஒரு முனையில் அது மீறப்பட்டால், அது அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் மீறப்பட்டதாகவே கருதப்படும்’ என்று அரக்சி, சமூக ஊடக பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தலைமை பேச்சுவார்த்தையாளரும் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகருமான முஹமது பகர் கலிபப்பும் இதே நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார். ‘இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சியோனிச ஆட்சியின் லெபனானுக்கு எதிரான போர்க்குற்றங்களின் தீவிரப்படுத்தலும், கடற்படை முற்றுகையும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா கடைப்பிடிக்கத் தவறியிருப்பதற்கான தெளிவான சான்றுகளாகும்’ என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இரு தரப்புடனும் பேசியதாகவும் ‘அவர்கள் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்துவதற்கு இணங்கியதாகவும்’ டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிரான தனது தாக்குதல்களை நிறுத்துவதற்கும், அதற்கு பதிலாக இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தாதிருப்பதற்குமான திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்தபோதும், ‘எமது நகரங்கள் எமது மக்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதலை நிறுத்தாவிட்டால்’ லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல் முனெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கை முனெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் வெளியான பின்னரும் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு நேற்றுக் காலை லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி வந்த இரு ரொக்கெட் குண்டுகளை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அது கூறியது. வடக்கு இஸ்ரேலில் உள்ள இரு கிராமங்களுக்கு அருகே இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் படையினர் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் தொடர்ச்சியான பீரங்கி குண்டுகளை கொண்டு மூன்று தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானின் பல இடங்களிலும் இஸ்ரேல் மிகக் கடுமையாக தாக்குதல்களை நடத்தியதாக லெபனானின் அரச செய்தி நிறுவனமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான போரை ஒட்டி கடந்த மார்ச் மாதம் லெபனானில் மோதல் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 3,433 பேர் கொல்லப்பட்டு மேலும் 10,395 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



