கென்யாவில் அமெரிக்க எபோலா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு

1 Min Read

கென்யாவில் அமெரிக்காவின் எபோலா சிகிச்சை மையம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, உத்தேச அமெரிக்க எபோலா தனிமைப்படுத்தல் மையத்திற்கு கென்ய நீதிமன்றம் நேற்று மேலும் மூன்று வாரங்களுக்குத் தடை விதித்ததோடு அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை வெளியிடுமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. கொங்கோ ஜனநாயகக் குடியரசு அல்லது உகண்டாவில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்காக, மத்திய கென்யாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் 50 படுக்கைகள் கொண்ட மத்திய நிலையத்தை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு கென்யர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதில் உள்ள சுகாதார அபாயத்தை அமெரிக்கா தட்டிக்கழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்ட ஆலோசனைக் குழுவொன்றின் மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, கென்ய நீதிமன்றம் கடந்த வாரம் இந்த உத்தேச திட்டத்திற்குத் தற்காலிகமாகத் தடை விதித்தது. இருப்பினும், சமீபத்திய நாட்களில் அமெரிக்க இராணுவ விமானங்கள் தொடர்ந்து பணியாளர்களையும் உபகரணங்களையும் கொண்டு வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்கென்ய உயர் நீதிமன்ற நீதியரசர் பட்ரிசியா நியாண்டி, இந்த வழக்குக்கு தீர்வுவரும் வரை நன்யுகி நகரில் அந்த மையத்தை நிர்மாணிக்கவோ அல்லது அங்கு செயல்பாடுகளைத் தொடங்கவோ கென்ய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நேற்று உத்தரவிட்டார். ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *