ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை சிக்கலாக்கும் என்று ஈரான் எச்சரித்திருக்கும் நிலையில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது அமைதி முயற்சியை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தம் கடந்த ஏழு வாரங்களாக நீடித்து வந்த நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானின் தெற்கு ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் இடம்பெற்றன. இது தற்காப்பு தாக்குதல் என்று அமெரிக்கா கூறியபோதும் போர் நிறுத்தத்தை மீறும் செயல் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஹோர்மோஸ்கான் பகுதியில் நிகழ்ந்த இந்த ‘ஆக்ரோஷமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கைகளின்’ விளைவுகளுக்கு அமெரிக்காவைத் தான் பொறுப்பு ஆக்குவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் கரையை ஒட்டி இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த முக்கியமான நீர்வழித்தடத்தை ஈரான் முடக்கியுள்ளதால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேடுக்கப்பட்டு வருவதோடு உடன்படிக்கை ஒன்றுக்கு ‘சில காலம்’ எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார். அமைதி உடன்படிக்கைக்கான புரிந்துணர்வில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் பில்லியன் டொலர் சொத்துகளை விடுவிக்க ஈரான் நாட்டு பேச்சுவார்த்தையாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தையும் மீறி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.
வெலபனானில் இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 120இற்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லெபனானுக்குள் இஸ்ரேல் படை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை மேலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 31 பேர் கொல்லப்பட்டு மேலும் 40 பேர் வரை காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் தெற்கு லெபனானில் உள்ள புர்ஜ் அல் ஷமலி நகரில் மாத்திரம் இரு சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்களுடன் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சில தாக்குதல்கள் தெற்கு லெபனானில் உள்ள யுனெஸ்கோ மரபுரிமை சொத்தாக இருக்கு 900 ஆண்டுகள் பழைமையாக பியூபோர்ட் கோட்டைக்கு அருகே இடம்பெற்றுள்ளன. பிராந்தியத்தில் உள்ள மத்தியகால கோட்டைகளுக்கான சிறந்த உதாரணமாக இந்தக் கோட்டை கருதப்படுகிறது. அதேபோன்று லெபனானின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான கிழக்கு லெபனானில் இருக்கும் கரவுன் அணைக்கு அருகே குறைந்தது மூன்று தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேல் இராணுவம் பெரும் அளவான படைகளுடன் செயற்பட்டு வருவதோடு நிலங்களை கைப்பற்றி, கட்டுப்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வடக்கு எல்லைப் பகுதிகளில் வாழும் சமூகங்களை பாதுகாக்கும் நோக்கில், நாங்கள் பாதுகாப்பு வலயத்தை பலப்படுத்தி வருகிறோம்,’ என்று அவர் தெரிவித்தார். இது தெற்கு லெபனானுக்குள் சில கிலோமீற்றர்கள் ஆழத்தில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ளதாகத் தாங்களே அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தை குறிப்பதாகும். இந்நிலையில் தெற்கு லெபனானில் தனது ஆக்கிமிப்பு பகுதியை விரிவுபடுத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘மஞ்சள் கோடு’ என இஸ்ரேல் அமைத்திருக்கும் இந்த ஆக்கிரமிப்பு வலயம் 2000 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது படைகளை திரும்பப்பெற்ற பின், லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையை குறிக்க ஐ.நா. வரையறுத்த ‘நீலக் கோட்டு’ எல்லையிலிருந்து விலகி அமைந்துள்ளது. அந்தக் கோடு, தெற்கு லெபனானுக்குள் 5 கி.மீ. முதல் 10 கி.மீ. நீண்டுள்ளது.
இந்த வலயத்தில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களை தமது ஊருக்கு திரும்பக் கூடாது என இஸ்ரேல் இராணுவம் எச்சரித்திருப்பதோடு அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ‘இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு நேரடியாக உள்ள அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில், முன்நிலை பாதுகாப்பு கோட்டுக்கு அப்பாற்பட்ட பகுதிகளை குறிவைத்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவே நெதன்யாகு கடந்த திங்களன்று அறிவித்திருந்தார். எனினும் தெற்கு லெபனானின் சவ்டார் அல் ஷர்கியா நகரை நோக்கி முன்னேறும் இஸ்ரேலியப் படை மற்றும் டாங்கிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரின் தொடர்ச்சியாகவே கடந்த மார்ச் 2 ஆம் திகதி லெபனானில் மோதல் வெடித்தது. அது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 3,213 பேர் கொல்லப்பட்டு மேலும் 9,737 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது. இதில் போர் நிறுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனானில் குறைந்தது 608 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறம் காசாவிலும் போர் நிறுத்தத்தை மீறி வரும் இஸ்ரேல் காசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வான் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆலி கான்ஸ் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் இந்தக் கட்டடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானம் பல ஏவுகணைகளையும் வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோரில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்டு பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 2023 ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 72,806 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



