மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி நேற்று (26) மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணமானது. இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஆடவிருப்பதோடு டெஸ்ட் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வா தொடர்ந்து செயற்படுகிறார்.
இதில் சரித் அசலங்கவிடம் இருந்தே ஒருநாள் அணித் தலைமை குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் முழங்கால் உபாதையை அடுத்து டி20 அணித் தலைமையை இழந்த அசலங்க தற்போது ஒருநாள் அணித்தலைமையையும் பறிகொடுத்துள்ளார். அவர் 16 பேர் கொண்ட ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்தபோதும் டி20 அணியில் இடம்பெறத் தவறியுள்ளார். இலங்கை அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் உப தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 அணியில் தசுன் ஷானக்கவுக்கு பதிலே குசலுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷானக்க கடந்த டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை அசலங்கவின் இடைவெளியை நிரப்பும் வகையிலேயே தலைவராக செயற்பட்டிருந்தார். எனினும் அவரால் அணித் தலைவராக சோபிக்க முடியாமல் போனது. எவ்வாறாயினும் இலங்கை டி20 குழாத்தில் தசுன் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
உபாதைக்கு பின்னர் வனிந்து ஹசரங்க இலங்கை ஒருநாள் மற்றும் டி20 குழாத்திற்கு திரும்பியுள்ளார். கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் டி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதே ஹசரங்க காயமடைந்தார். அப்போது இடது தொடைப் பகுதியில் காயத்துக்கு உள்ளானதால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவரால் ஆட முடியாமல்போனது.
எவ்வாறாயினும் ஐபிஎல் போட்டியின்போது மீண்டும் ஒருமுறை காயத்துக்கு உள்ளான வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண மற்றும் காயத்துக்கு உள்ளாகி இருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுகன் துஷார இருவரும் இலங்கை டி20 குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். இதில் துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் எஷான் மாலிங்க ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரு குழாத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு மிலான் ரத்னாயக்க (இரண்டுக்கும்), அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான் (ஒருநாள்) மற்றும் பினுர பெர்னாண்டோ (டி20) ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அழைக்கப்பட்டுள்ள புதிய வீரர்கள் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்களாவர். 27 வயது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளே டி20 குழாத்தில் இடம்பெற்றுள்ளார். அண்மைக் காலத்தில் அவர் சோபித்து வருவதோடு கடந்த ஏப்ரலில் நடந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆசிய கிண்ண தொடரில் அவர் ஒரே ஒரு டி20 போட்டியில் மாத்திரம் ஆடி இருந்தார்.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுக வீரராக பசிந்து சூரியபண்டார இடம்பெற்றுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சோபித்ததை அடுத்தே அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அதுபோன்று 29 வயது சகலதுறை வீரர் இசித்த விஜேசுந்தரவுக்கு முதல் முறை அழைப்புக் கிடைத்துள்ளது.
ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில் அணியில் இடம்பெற்றிருப்பதோடு இடது கை சுழற்பந்து சகலதுறை வீரர் சொனால் தினூஷ இதுவரை ஒரு போட்டியில் ஆடி இருக்கும் நிலையில் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை டெஸ்ட் அணி சுமார் கடந்த ஓர் ஆண்டாக போட்டிகளில் ஆடத நிலையிலேயே மேற்கிந்திய தீவுகள் பயணமாகிறது. இலங்கை அணி கடந்த ஜூன் மாதமே கடைசியாக பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடியது.
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி ஆரம்பத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி ஆரம்பமாகும். தொடர்ந்து மூன்று டி20 போட்டிகளும் ஜூன் 11, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. நோர்த் சௌண்டில் உள்ள விவ் ரிச்சட்ஸ் அரங்கில் நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளும் ஜூன் 25 மற்றும் ஜூலை 3 ஆம் திகதிகளில் ஆரம்பமாகும்.
இலங்கை ஒருநாள் குழாம்: குசல் மெண்டிஸ் (தலைவர்), கமில் மிஷார, பவன் ரத்நாயக்க, பெதும் நிசங்க, ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), மிலான் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெள்ளாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, எஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான்.
இலங்கை டி20 குழாம்: பெதும் நிசங்க, கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), தசுன் ஷானக, மிலான் ரத்நாயக்க, துனித் வெள்ளாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, எஷான் மலிங்க, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார.
இலங்கை டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ் (உப தலைவர்), பெதும் நிசங்க, லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சொனால் தினூஷ, குசல் மெண்டிஸ், மிலான் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, இசித விஜேசுந்தர, கசுன் ராஜித.



