‘போர் நிறுத்தம் எந்நேரமும் முறியலாம்’ டிரம்ப் எச்சரிக்கையால் பதற்றம் அதிகரிப்பு

3 Min Read

ஈரானுடனான போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் முறிந்துவிடக் கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தபோதும் அது ‘நம்பமுடியாத அளவுக்கு பலவீனம் அடைந்துள்ளது’ என்று ஓவல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (11) செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

டிரம்பின் இந்தக் கருத்தை அடுத்து, ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முஹமது கலிபஃப் ‘எக்ஸ்’ சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் ஆயுதப் படைகள் பதில் அளிப்பதற்கும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பாடம் கற்பிப்பதற்கும் தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பிலான ஈரான் தனது பதில் முன்மொழிவை அமெரிக்காவுக்கு கடந்த ஞாயிறன்று வழங்கியது. எனினும் அதனை நிராகரித்த டிரம்ப், ‘முற்றாக ஏற்க முடியாது’ என்றும் அது ஒரு ‘குப்பைத் துண்டு’ என்றும் குறிப்பிட்டார்.

ஈரான் அளித்திருக்கும் பதில் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போர் நிறுத்தத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ‘எமக்கு அவர்கள் அனுப்பி இருக்கும் குப்பைத் துண்டை வாசித்த பின்னர் இப்போது (போர் நிறுத்தம்) பலவீனம் அடைந்துள்ளது. அதனை நான் முழுமையாக வாசிக்கக் கூட இல்லை’ என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

‘ஈரானின் ஆயுதப்படைகள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளன’ என்று கூறிய பின்னர், கலிபஃப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், ’14 அம்சங்கள் கொண்ட முன்மொழிவில் கூறப்பட்டுள்ளபடி, ஈரான் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்றார்.

‘அவர்கள் எவ்வளவு காலம் காலதாமதம் செய்கிறார்களோ, அதற்கான செலவை அமெரிக்க வரி செலுத்தும் மக்கள்தான் அதிகமாக ஏற்க வேண்டி வரும்’ என்றும் அவர் கூறினார்.

ஈரானின் முன்மொழிவில் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை நிறுத்துவது மற்றும் ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிப்பது போன்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்திருப்பதாக ஈரான் அரச சார்பு டஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று போரினால் ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கு இழப்பீடுகளை கோரியிருக்கும் ஈரான், ஹோர்முஸ் நீரிணை மீதான இறையாண்மையையும் வலியுறுத்தியுள்ளது. எனினும் ஈரானின் அணுத் திட்டம் உட்பட விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன்னர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவே அமெரிக்கா பரிந்துரைத்திருந்தது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை ஆசிய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.50 ஆக உயர்ந்தது. சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கி இருக்கும் நிலையிலேயே சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒபெக் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் மேலும் வீழ்ச்சி கண்டு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவை எட்டி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவுக்கு ஈரானின் எண்ணெயை எடுத்துச் செல்ல உதவும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த திங்களன்று புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானின் இராணுவ மற்றும் அணுத் திட்டங்களுக்கான நிதியை துண்டிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டிரம்ப் இன்று (13) பீஜிங் பயணித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.

இதன்போது அவர் ஈரான் விவகாரம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் லெபனான்–இஸ்ரேல் இடையே கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் லெனானில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படை தொடர்ந்தும் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தெற்கு லெபனானின் கபிர் துனின் சிறு நகரில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றின் மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் அறுவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று அல் மசூரி மற்றும் மஜிதால் சுன் நகரங்களில் நேற்று அதிகாலை இஸ்ரேல் பீராங்கி தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *