உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி, ஏழாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இதன் ஊடாக ஆபிரிக்காவின் நீண்ட கால ஆட்சியாளர்களில் ஒருவராக அவரும் இடம்பிடித்துள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, தலைநகர் கம்பாலாவில் கவச வாகனங்களுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றார். பொது அமைதியைப் பேணுவதற்காக இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஜனவரியில் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலில் 81 வயதான யோவேரி முசெவேனி, 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பதவியேற்றுள்ளார். அவரது முக்கிய போட்டியாளரும், பொப் நட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறியவருமான போபி வைன், இத்தேர்தல் வாக்குச்சீட்டு முறைகேடுகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி தேர்தல் முடிவை நிராகரித்தார். தேர்தல் அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை மறுத்தனர். முசெவெனி 1986 இல் ஒரு கிளர்ச்சித் தலைவராக முதன் முதலில் ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் சில ஆப்பிரிக்கத் தலைவர்களில் இவரும் ஒருவராவார்.



