பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் ஈரான் ‘கவலை’

2 Min Read

அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் மெஹதி தாஜ் 2026 உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் ஈரான் அணி ‘நிச்சயமாக’ பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள், ஈரான் அணியின் பயணம் மற்றும் அணி மீதான அணுகுமுறை தொடர்பான கவலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ‘அனைத்து வீரர்களும் தொழில்நுட்ப குழுவினரும், குறிப்பாக இஸ்லாமிய புரட்சிக் காவல் படையில் கட்டாய இராணுவ சேவை செய்தவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விசா பெற வேண்டும்’ என்று மெஹதி தாஜ் கவலை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையாலும் ஈரான் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்ட அறிக்கையில், விசா, பாதுகாப்பு மற்றும் ஈரான் வீரர்கள், அதிகாரிகள் மீதான அணுகுமுறை குறித்து உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், ‘எங்கள் நம்பிக்கைகள், கலாசாரம் மற்றும் கொள்கைகளில் இருந்து பின்வாங்காமல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்போம்’ என்றும் தாஜ் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த மாதம், கனடா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க தாஜுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இஸ்லாமிய புரட்சிக் காவல் படையுடனான அவரது பழைய தொடர்புகளே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. அந்த அமைப்பை அமெரிக்காவும் கனடாவும் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரான் தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் அதிகாரிகளுக்கு உலகக் கிண்ண போட்டியின் போது மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தாஜ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

உலகக் கிண்ணத்தில் ஈரான் அணி ‘ஜி’ பிரிவில் பெல்ஜியம், நியூசிலாந்து மற்றும் எகிப்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *