அமெரிக்காவின் அமைதி முன்மொழிவு ஒன்றுக்கு ஈரான் அளித்த பதிலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முற்றாக நிராகரித்த நிலையில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பதோடு மீண்டும் போர் மூளும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருக்கும் சூழலில் பதற்றமும் மேலும் உச்சம் பெற்றுள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வகையிலேயே அமெரிக்கா சில தினங்களுக்கு முன்னர் தனது முன்மொழிவை வழங்கியதோடு அதற்கு ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதிலை அளித்திருந்தது.
ஈரானின் அரச சார்பு டஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் ஊடாக ஈரானின் முன்மொழிவு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையிலேயே ஈரான் இந்த நிபந்தனையை விதித்துள்ளது.
போரினால் ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கு இழப்பீடு கோரி இருக்கும் ஈரான், ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமையையும் வலியுறுத்தி இருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதேபோன்று அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை கைவிடவும், தடைகளை அகற்றவும் ஈரான் எண்ணெய் விற்பனை மீதான அமெரிக்காவின் தடையை நீக்கவும் மேலும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
எனினும் இந்த முன்மொழிவு வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் அதனை நிராகரித்துள்ளார். ‘எனக்கு இதனை பிடிக்கவில்லை – முற்றாக ஏற்க முடியாதது’ என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
எனினும் அமெரிக்கா தொடர்ந்து ‘நியாயமற்ற கோரிக்கைகளை’ விடுத்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாயி, ஈரான் வழங்கில் இருக்கும் பதில் ‘மிகைப்படுத்தப்பட்டதாக அமையவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். ‘போரிட நிர்பந்திக்கப்படும் போதெல்லாம், நாங்கள் போரிடுவோம் மற்றும் இராஜத்திரத்திற்கான வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் நாம் அந்த வாய்ப்பைப் பெறுவோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுத் திட்டம் உட்பட மேலும் சிக்கலான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்மொழிந்திருந்தது.
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் சூழலில் எண்ணெய் விலை நேற்று பீப்பாய் ஒன்று 4 டொலர்களால் அதிகரித்தது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடுக்கும் முன்னர் சர்வதேச எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகித்த இந்த குறுகலான கடல் பாதை போரின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் தேசிய தேர்தல் ஒன்று நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு குறைவான காலமே இருக்கும் சூழலில் நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்திருப்பதோடு அமெரிக்க வாக்காளர்கள் இடையிலும் இந்தப் போர் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை அண்மைய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தல் டிரம்பின் குடியரசு கட்சி கொங்கிரஸ் அவையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதில் தீர்க்கமாக உள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் அமெரிக்காவுக்கு சர்வதேச அளவிலும் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு கப்பல்களை அனுப்புமாறு நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த அழைப்பை அந்த நாடுகள் நிராகரித்துள்ளன.
தற்போதைய சூழலில் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது அல்லது இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு ஒன்று இல்லாமல் உள்ளது.
டிரம்ப் நாளை (13) சீனா பயணமாகவுள்ளார். சர்வதேச எரிபொருள் நெருக்கடி மற்றும் உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்திற்கு மத்தியில் டிரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான சந்திப்பில் ஈரான் தொடர்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான சீனாவின் செல்வாக்கை பயன்படுத்தி உடன்படிக்கை என்றை எட்ட அமெரிக்கா முயற்சிக்கும் என்று நம்பப்படுகிறது.
இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருப்பதால் ஈரானுடனான போர் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அகற்றுவது, செறிவூட்டும் தளங்களை செயலிழக்கச் செய்வது மற்றும் ஈரான் ஆதரவு அயுதக் குழுக்கள் மற்றும் அதன் பலிஸ்டிக் ஏவுகணை திறன் தொடர்பில் தீர்வு காண வேண்டி இருப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
சிபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு கடந்த ஞாயிறன்று பேட்டி அளித்த நெதன்யாகு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கு சிறந்த வழி இராஜதந்திர நடைமுறையாகும் என்று வலியுறுத்தினார். ‘எனினும் வலுக்கட்டாயமாக அதனை அகற்றுவதற்கான வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது’ என்றும் தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியா சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘எதிரிகளிடம் ஈரான் சிரம் தாழ்த்தாது என்பதோடு பலத்துடன் தேசிய நலனை பாதுகாக்கும்’ என்றார்.
இராஜதந்திர முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் அண்மைய நாட்களில் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டி மோதல்கள் அதிகரித்துள்ளன. ஈரானில் இருந்து வந்த இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டது. அபூதாபியில் இருந்து தனது கடல் வழியாக வந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு கட்டார் கண்டனத்தை வெளியிட்டது. தனது வான் பரப்புக்குக்குள் எதிர்ப்பு ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக குவைட் கூறியது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.



