மெண்டிஸ் இலங்கை ஒருநாள், டி20 அணிகளின் தலைவராக வாய்ப்பு

2 Min Read

எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துடன் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைவராக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸை நியமிக்க தேர்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி 31 வயதாகும் குசல் மெண்டிஸ் ஒருநாள் சர்வதேச அணியில் சரித் அசலங்கவுக்கு பதிலாகவும் டி20 அணியில் தசுன் ஷானக்கவுக்கு பதிலாகவும் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார். எதிர்கால சர்வதேச போட்டி அட்டவணைக்கு அமைய அணியை வழிநடத்துவது மற்றும் அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் டெஸ்ட் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வாவை தக்கவைப்பதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி அண்மைக் காலமாக சோபிக்கத் தவறி வரும் நிலையிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 2023 இல் குசல் மெண்டிஸ் சிறிது காலம் தலைவராக செயற்பட்டதை அடுத்தே அசலங்கவிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அசலங்கவின் தலைமை பதவி மற்றும் அவர் எடுக்கும் முடிவுகள் தொடர்பில் அண்மைக் காலத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதனையடுத்து அனுபவம் கொண்ட முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்கவிடம் டி20 அணித் தலைமை பொறுப்பை தேர்வாளர்கள் வழங்கி இருந்தனர்.

மெண்டிஸ் கடந்த 12 மாதங்களில் 11 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 461 ஓட்டங்களைப் பெற்றதோடு 28 டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில் 702 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அண்மையில் நடந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கிண்ணத்தை வென்ற பெஷாவர் சல்மி அணிக்காக ஆடிய மெண்டிஸ் 11 இன்னிங்ஸ்களில் 550 ஓட்டங்களைப் பெற்றதோடு அதன் ஓட்ட சராசரி 55.00 ஆகும்.

அவர் அண்மைக் காலத்தில் சோபித்து வருவது தேர்வாளர்களின் நம்பிக்கையை வெல்ல காரணமான நிலையிலேயே அவரை தலைமை பதவிக்கு தேர்வு செய்ய அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

குசல் மெண்டிஸ் தலைமையில் இலங்கை அணி இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இருப்பதோடு அதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வென்று 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணித் தலைவராக இருந்த தசுன் ஷானக்க காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து அவருக்கு பதில் குசல் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அடுத்து இலங்கை அணி தலா மூன்று ஒருநாள், டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *